3088. படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
நடைப்புலையேன் பொருட்டாக நடந்திரவிற் கதவம்
நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
உரை: யாவராலும் தடுக்க வொண்ணாத பேரின்ப வெள்ளமாகிய பெருமானே, ஒப்பற்ற திருவம்பலத்தில் இன்பக் கூத்தாடும் அருளரசே, பிரமனும் திருமாலும் பன்னெடுநாள் முயன்று பார்க்க விரும்பிய போதும் காணக் கிடையா தொழிந்த திருவடித் தாமரைகள் வருந்துமாறு புலையொழுக்க முடையவனாகிய என் பொருட்டு இரவுக் காலத்தில் நடந்து போந்து என் வீட்டுக் கதவைப் பரக்கத் திறந்து ஒன்றைக் கொடுத்ததுமன்றி சிலநாள் இடையே கழிந்த பின்னும் என்பால் வந்து என் மனத்திற் படிந்திருந்த மயக்க மெல்லாம் நீங்கத் தெளிவுறுத்தினாய்; உனது இனிய திருவருளை என்னென்று புகல்வேன்; கூறுக. எ.று.
எல்லாம் வல்லவனாதலின் இறைவன் திருவருள் வெள்ளம் பாயத்தொடங்கின் அதனைத் தடுப்பாரும் கெடுப்பாரும் வேறின்மை புலப்பட, “தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே” எனப் பேசுகின்றார். தில்லையம்பலத்துக்கு ஒப்பு வேறு இன்மையின், அதனைத் “தனிமன்று” என்றும், அத் திருக்கூத்து உயிர்கட்கு இன்பம் அருளுவது விளங்க, “ஆனந்தத் தாண்டவம்செய் அரசே” என்றும் எடுத்தோதுகின்றார். தாண்டவம் - கூத்து. படைப்பவன் - பிரமன். காப்பவன் - திருமால். நடை. - ஒழுக்கம். புலை நடை யுடையேன் என்பது நடைப் புலையேன் என வந்தது; இதற்கு நடையாற் புலையேன் எனினும் பொருந்தும். நன்கு திறப்பித்தல் - பரக்கத் திறந்து வைத்தல். இடைப்பட்ட நாள் - சிலநாள் இடையிட்டு வந்தமை குறிக்கிறது. இதயம் - மனம். மக்கள் வாழ்வில் கணந்தோறும் கறங்கு போற் சுழலும் முக்குண வியக்கத்தால் மயக்கவிருள் படிதல் பற்றி, “இதய மயக்கெல்லாம்” என இயம்புகிறார். இரிதல் - நீங்குதல். நாளும் மனம் தெளிந்த நிலையில் நிலவச் செய்தமை புலப்பட, “உன்றன் இன்னருள் என்னென்பேன்” என்று உரைக்கின்றார்.
இதனால், நாளும் மனம் சத்துவ குணமே கொண்டுறையச் செய்த திருவருளை வியந்தவாறு. (29)
|