3089.

     முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
          முழுதிரவில் நடந்தெளியேன் முயங்குமிடத் தடைந்து
     அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
          தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
     என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
          டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
     மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
          வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே.

உரை:

     மின்னற் கொடி போற் சிவந்த சடை மேற்றங்கும் பிறைச்சந்திரன் அசைந்தாட அகன்ற அம்பலத்தில் திருக்கூத் தியற்றும் விமல பரம்பொருளாகிய சிவபெருமானே, பழையவாகிய வேதங்கட்கு முடிமணியாகும் திருவடியாகிய தாமரைகள் வருந்தும்படி நள்ளிரவில் எளியனாகிய யான் உறையுமிடத்துக்கு நடந்து வந்து தாயினும் சாலவும் பரிந்து அழகிய கதவைத் திறக்கச் செய்து என் அகங்கையில் ஒன்றைத் தந்து அதனை ஏற்று நோக்கிய என்னை அன்புடன் பார்த்து, என் மகனே, இனி யுனக்குக் குறை என்னை யுளது? மயங்குதலின்றி மகிழ்வோடு இருப்பாயாக, என உரைத்தருளினாய்; இந்த நினது இனிய திருவருளை என்னென்று புகல்வேன். எ.று.

     “மின்னியலும் வார்சடை யெம்பெருமான் கண்டாய்” (மழபா) எனப் பெரியோர் புகழ்தலின், “மன்னை நிகர் செஞ்சடை” என விளம்புகின்றார். வியன் பொது - அகன்ற அம்பலம். உயிரும் உடம்பை நோக்கப் பரம் பொருளாயினும் அது மலமுடையதாகலின், பரசிவத்தை, “விமல பரம்பொருள்” என்கின்றார். பரம் - மேல். மிகவும் பழமையான தென எல்லாரும் ஒப்ப மொழிதலால் “முன்னை மறை” எனவும், மறை ஞான முடிவு சிவத்தின் திருவடியி லடங்குதலால், “மறைமுடி மணியாம் அடிமலர்கள்” என அறிவிக்கின்றார். முழுதிரவு - நள்ளிரவு. ஒளியின் சிறு கலப்புமின்றி இருளே செறிந்த இரவு என்றற்கு இவ்வாறு இசைக்கின்றார். முயங்குமிடம் - உறங்குமிடம்; வீடு என்பதாம். அங்கை - அகங்கை; உள்ளங்கை யென்றுமாம். இனி ஒரு குறையும் உண்டாகாது என்பதுபட, “என்னை இனி” என்று கூறுகிறார். இனி என்னை நின்னின் வேறாகக் கருதாதேஎன்று இத்தொடர்க்குப் பொருள் கூறினும் பொருந்தும். இருத்தி - வியங்கோட் பொருளில் வந்த இகர வீறு.

     இதனால், மயக்கமின்றி யுறைக என அருளியவாறாம்.

     (30)