3090.

     மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
          மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
     சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்
          செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
     மாதானத் தவர்சூழ வாழ்கஎன உரைத்தாய்
          மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
     ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே
          ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே.

உரை:

     வேத வேள்விகட்குரிய மந்திரக் கிரியைகளில் உயர்ந்தவர்க்கும் உணர்தற்கரிய பரம்பொருளே, மேலானசிற்றம்பலத்தில் ஒளிமயமான நடம் புரியும் தலைவனே, தத்துவ மண்டலங்கட்கு மேலான இடத்தே அருளொளியாய் விளங்குகிற நின்னுடைய திருவடிகள் மிகவும் வருந்து வண்ணம், வினையை யுடையவனாகிய என் பொருட்டுஇரவில் என் மனைக்குநடந்து போந்து, தலைவாயிற் கதவைத் திறக்கச் செய்து சிறியவானகிய என் கையில்ஒன்றைக் கொடுத்தருளி, இனி நீ சிறிதும் அஞ்சாமல் இவ்வுலகில் உயர்நிலையில் இருக்கின்ற மேன் மக்கள் சூழ்வர வாழ்க என்று உரைத்தருளினாய்; பெரிய மாணிக்க மணி போன்ற நினது திருவருளின் வளமை வேறே யாவரிடத்தும் இல்லை. எ.று.

     ஓதா - தானத்தவர் வேத வேள்விக்குரிய மந்திரங்களிலும் கிரியைகளிலும் சிறந்தவர். ஓதாதானம் - ஓதானம் என வந்தது; ஓதானிகளை ஓதா என்றும் வேத நெறியினர் (மீமாஞ்சகர்) வழங்குவர். வைதிக வுணர்வுடைய ஓதாக்களாலும் உணர வொண்ணாததாகிய பரம்பொருள் என்பது கருத்து. பரசிவத்தைப் பரவஸ்து என்பவாகலின், “பொருளே” எனப் புகல்கின்றார். சிற்றம்பலம் எனப்படினும் பொருளுணர்வார்க்குச் சிவ மோங்கி யுயர்ந்த பேரம்பலமாதல் விளங்க, “ஓங்கிய சிற்றம்பலம்” எனவும், சிவஞானிகட்குத் திருவரு ளொளியாய்த் திகழ்வது பற்றி, “ஒளி நடம்செய் பதியே” எனவும் உரைக்கின்றார். மீதானம் - சுத்த மாயா தத்துவத்தின் மத்தகத் தொளிரும் நாத தத்துவத்தின் அந்தம்; அங்கே சிவம் ஒளியாய்த் திகழ்தலின், “மீதானத் தருளொளியாய் விளங்கிய நின் திருவடிகள்” எனத் தெரிவிக்கின்றார். சீதானம் - சிற்ப வேலைகள் செய்யப்பட்டிருக்கும் மனையின் தலைவாயில். பெரும்பாலும் திருவிளங்கும் தெய்வ வுருக்களே வாயிலின் பொறிக்கப் படுதலின், “சீதானம்” எனப்படுகிறது. மாதானத்தார் - செல்வம், கல்வி, பதவி முதலியவற்றால் உயர்நிலையில் உள்ள பெருமக்கள்.

     இதனால், திருவருட் செல்வத்தால் உலகில் மிக்க மேன்மக்களோ டொப்ப வாழ்தல் கூடும் எனத் தெரிவித்தவாறாம்.

     (31)