3091. வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்
விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த
நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்
நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து
போதாந்த மிசைவிளங்குந் திருமேனி காட்டிப்
புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே
சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த
துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே.
உரை: சூதும் பொய்யும் நிறைந்த சூழ்நிலைகள் அனைத்துக்கும் அப்பாலாயுள்ள துரிய வெளியில் மெய்யாய்க் காண விளங்கும் பெரிய அருட் குருவானவனே, வேதாந்த ஞானம், ஆகம ஞானம், என்ற இரண்டும் இனிது விளங்குமாறு அமைந்த இரண்டும் மென்மையான திருவடிகள் நாதாந்த பரவெளியில் நடந்தருளுவது போல, மண்ணின் மேல் வருந்த நடந்தருள நாயிற்கடைப்பட்ட யான் இருக்கும் இடத்தை யடைந்து நூலறிவின் எல்லையில் விளங்கும் திருமிக்க கலைஞான மேனியைக் காட்டிப் புலையொழுக்கமுடையனாகிய என் கையில் ஒன்றை மெய்யுறத் தந்த மெய்ப்பொருளாயவனே, உன் திருவருளை என்னென்று வியப்பேன். எ.று.
சூதாந்தம் - சூதும் பொய்யும் புனைந்துரைகளும் நிறைந்து தன்னலமும் இனநலமும் நண்ணிய பொய்ந் நூலறிவு. இதனால் மக்களினம் ஒருமை சிதைந்து உண்மை யுணர்விழந்து, வேற்றுமைச் சூழலிற் பட்டுப் புறநோக்கால் கீழ்மை யெல்லையடைந்தமையின், அதற்கு வேறாய் அப்பாலாய் அகநோக்கால் காணத்தக்க துரியக் காட்சிக்கு விளக்கமுறும் சமரச வித்தக ஞானத் திருவருட் பரமபெருமானை, “துரிய வெளிக்கே விளங்கும் பெரிய அருட் குருவே” என்று போற்றுகின்றார். வெளிக்கென்ற விடத்து நான்கனுருபு ஏழாவதன் பொருட்டு. சூது - பொய்ந் நூலறிவு, வேதாந்தம் - வேதம் உபநிடதம் மிருதி முதலிய நூலறிவு. சி்த்தாந்தம் - காமிக முதல் வாதுளம் ஈறாக நிற்கும் ஆகம வறிவு. இரண்டையும் இரு திருவடிகளாக உருவகம் செய்து, “இரண்டும் விளங்க அமர்ந்த மெல்லடிகள்” என விளம்புகிறார். நாதாந்த வெளி - நாத தத்துவத்துக்கு அப்பாலதாகிய பரவெளி. நாத தத்துவத்தின் வாயிலாக உணரப்படுதலின், “நாதாந்த வெளி” என்று கூறுகிறார் அறிந்ததைக் கொண்டு அறியாததைக் காட்டுவது உவமமாகலின் அந்நெறியை மேற் கொண்டு, மண்ணுலகில் கால்களால் நடப்பது போல நாதாந்தப் பரவெளியில் இறைவனாகிய பரசிவம் இயங்குவதாக வுரைக்கின்றார். இங்கே கூறுவது தாமரை போன்ற முகத்தை, முகம் போன்ற தாமரை என்பது போலும் உவம வாய்ப்பாடு. போதாந்தம் - ஈண்டுச் சிற்பம். இசை முதலிய கலை நூலறிவு. புலையேன் - பொய், களவு முதலிய புலையொழுக்கத்தை யுடையேன்.
இதனால், திருமேனி காட்டித் திருவருள் செய்த திறம் கூறியவாறாம். (32)
|