3093. விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்
விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து
வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து
மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து
இந்துநிலை முடிமுதலாந் திருஉருவங் காட்டி
என்கைஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய்
முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில்
முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே.
உரை: ஞான சபையின்கண் முத்தான்மாக்கள் கண்டு மகிழும்படி, நடனம் புரிகின்ற சிவ பரம்பொருளே, விந்து தத்துவம், நாத தத்துவம் என்ற தத்துவ மிரண்டிற்கும் தலைமையாய் விளக்க மருளுவனவாகிய நின்னுடைய சிவந்த திருவடிகள் மிக வருந்துமாறு நடந்து போந்து நிற்றற் பொருட்டுச் சிறுமையையுடைய யான் இருக்கு மிடத்தையடைந்து, அழகிய வாயிற் கதவைத் திறக்கச் செய்து, உட்புகுந்து, மகனே! என என்னை யழைத்தருளிப் பிறை தங்கிய திருவடி முதல் திருவடி யீறாக அமைந்த முழு வுருவத்தையும் காட்டி என்னுடைய கையில் ஒன்றைத் தந்து இன்பம் எய்துக எனவுரைத்தருளினாய் முற்படும் மனநிலையையுடைய சிறியனாகிய யான் இதற்கேதுவாகச் செய்துள்ள தவத்தை அறிகிலேன், காண். எ.று.
நாதம் மேலதும் விந்து அதன் கீழதுமாயினும் செய்யுளாகலின் மாறி நின்றது. நாதத்தைச் சிவ தத்துவ மென்றும், விந்துவைச் சத்தி தத்துவமென்றும் நூலோர் கூறுவர். சிவ தத்துவம் ஞானம் என்றும், சத்தி தத்துவம் தொழிலென்றும் அறிக. இவ்விரண்டிற்கும் மேலாய் நின்று இயக்குவது பரசிவமாதலின், அதனை “அரசாய்” என்று குறிக்கின்றார். சிவம் சத்தி என்ற இரு தத்துவங்களையும், திருவடியாகக் கொண்டு “இரு நிலைக்கும் அரசாய் விளங்கிய நின் சேவடிகள்” என வுரைக்கின்றார் எனினும் அமையும். வந்ததன் பயன் வள்ளற் பெருமான் சிந்தைக்கண் நிறைபெறுவது கருதினமை விளங்க “நிலைபெற” என்கின்றார். மணிக்கதவம் - அழகிய கதவு. வருவார் வந்தமை தெரிவிக்கும் மணி கட்டிய கதவு என்று உரைப்பதுமுண்டு. பிறை தங்கிய சடைமுடியை “இந்துநிலை முடி” எனக் குறிக்கின்றார். இந்து - பிறைச்சந்திரன். இது கொண்டு நிலைத்த இன்பம் பெறுக என்பாராய், “என் கையில் ஒன்றளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய்” என மொழிகின்றார். உரை கேட்டவிடத்து உளதாகிய உள்ளத்துடிப்புப் புலப்பட, “முந்துநிலைச் சிறியேன்” என்றும், இத்துணை நலம் உளதாதற்குக் காரணம் முன்னைத் தவமெனத் தெளிந்தமை தோன்ற, “செய்தவம் அறியேன்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், திருவருட் பேற்றுக்குரிய முன்னைத் தவத்தை நினைவு கூர்ந்தவாறாம். (34)
|