3094. நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்
நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே
அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில்
அணைத்தருளிக் கதவுதிர்ந் தடியேனை அழைத்தே
சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச்
சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய்
பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன்
பரம்பரமா மன்றில்நடப் பயின்றபசு பதியே.
உரை: மேன் மேலாக வுயர்ந்த பொன்னம்பலத்தில் திருநடம் புரிகின்ற பசுபதியே, சிவ முதலிய நிலைகள் ஒன்பதிற்கும் அதிகாரம் செய்கின்ற பேரரசாகப் பொருந்திய நின்னுடைய அழகிய திருவடிகள் வருந்த நடந்து கீழ்நிலையிற் கீழாய புலையொழுக்கமுடைய யான் இருக்குமிடத்துக்கு இரவிற் போந்து, கதவைத் திறக்கச் செய்து, என்பால் வந்து என்னை அருகழைத்து என்னுள் சிவமாம் தன்மை நிலைபெறுமாறு என்னுடைய செவ்விய கையில் ஒன்றைக் கொடுத்துச், சிந்தை மகிழ்வுடன் இருப்பாயாக என்று பவளம் போற் சிவந்த வாயைத் திறந்து உரைத்தருளினாய்; பிறப்பு நிலையிற் கடையவனாகிய யான் இதற்கு என்ன தவம் செய்தேனோ, அறியேன்.
பரம் - மேன்மை; அடுக்கு மிகுதி குறித்தது. மாமன்று - பொன்னம்பலம். பசுபதி - ஆன்மாவாகிய பசுக்களுக்குத் தலைவன். சிவ முதலிய நிலைகள் ஒன்பதும்; சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், ஈசன், உருத்திரன், மால், அயன் என வரும். இப்பதங்களிலிருந்து அருளரசு செலுத்துவது பரசிவவமாதலால், “நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்” எனக் கூறுகின்றார். “சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழுமீசன், உவந்தரு ளுருத்திரன் தான் மால் அயன்” (சிவ. சித்தி) என அருணந்தி சிவனார் அறிவிக்கின்றார். இவை அருவம் நான்கு, உருவம் நான்கு, அருவுருவம் ஒன்றென ஒன்பதாய் விளங்கும். பொன்னடிகள் - அழகிய திருவடிகள். அவநிலை - கீழாய நிலை. பொய் களவு முதலியன புலையொழுக்கமாகும். சிவம் - சிவம் பெறுதற்குரிய நற்பண்பு. சித்தம் - மனம். இன்பமாக வாழ்க என்பாராய், “சித்தம் மகிழ்ந்துறைக” எனச் செப்புகின்றார். பவளம் - பவளம் போற் சிவந்த வாய்; ஆகு பெயர். பவம் - பிறப்பு.
இதானல், அவலக் கவலையின்றி இனிது வாழ்க என அருளியவாறாம். (35)
|