3095. புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
எம்பெருமான் நின் அருளை என்னெனயான் புகல்வேன்
தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
உரை: குளிர்ந்த வெள்ளைப் பிறைத் திங்கள் தங்கிய செஞ்சடை எங்கும் பரந்து நின்று ஆட, ஒப்பற்ற அம்பலத்தில் எழுந்தருளி இன்பத் திருக்கூத்தாடும் அருளரசே, சிவபுண்ணியம் செய்த மேலோர் திருவுள்ளமாகிய கோயிலில் விரும்பி யெழுந்தருளும் பொன் மலர் போன்ற திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்த நடந்து, எளியனாகிய யான் இருந்த மனையை யடைந்து, கதவைத் திறக்கச் செய்து எதிர் கொண்ட என் கையில் நன்பொருள் ஒன்றைத் தந்தருளிய நினது அருட்பெருமையை நான் மனத்தின்கண் நினைத்த போதெல்லாம் அஃது என் நெஞ்சினை யுருக்குகின்றது; எனின், எம்பெருமானாகிய உனது பேரருளை என்னென்று புகல்வேன். எ.று.
வெண்மதி யென்றது பிறைச் சந்திரனை. திருக்கூத்து ஆடுகையில் சிவந்த சடை எண்டிசையும் விரிந்து பரந்து ஆடுவது விளங்க, சூடிய பிறையும் நழுவி விழாமல் நிற்பது புலப்பட, “நின்றாட” என வுரைக்கின்றார். புண்ணியர், சிவ புண்ணியத்தால் மேம்பட்டவர். நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொள்பவனாயினும் புண்ணியர் மனத்தின்கண் சிறப்புற மேவதலால் “புகுந்து அமர்ந்து விளங்கும் சேவடிகள்” என்று புகல்கின்றார். பொன்னிற மேனியனாகலின், திருவடிகள் பொற்றாமரை போல்கின்றன என்றற்கு, “பொன் மலர்ச் சேவடி” எனப் புகழ்கின்றார். எளியனாகிய எனக்கென ஓர் இடம் இன்மையின் யான் எங்கே செல்கின்றேனோ அங்கே போந்தருளினை என்பாராய், “எளியேன் நண்ணிய இடத்தடைந்து” எனவும், இடத்தின் சிறுமையும் புன்மையும் நோக்காமல் என்னைப் பொருளாக நோக்கி நன்பொருள் ஒன்றை வழங்கினாய் என்பாராய், “நற்பொருள் ஒன்றென் கைதனில் நல்கிய நின் பெருமை” எனவும் இயம்புகிறார். பொருணலமும் அளித்த அருணலமும் நினைக்கும் நெஞ்சினை நீராய் உருக்குதல் தோன்ற, “என் மனமுருக்கும் என்றால்” எனக் கூறுகின்றார்.
இதனால், நன்பொருளின் நலம் நினைந்து மனம் உருகுமாறு உரைத்தவாறாம். (36)
|