3096. மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்
முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே
எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்
புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே
உரை: மலர் வகைகள் நிறைந்திருக்கும் சோலைகளையுடைய தில்லை நகர் அம்பலத்தின் கண் திருநடம் செய்து உயிரினங்கட்கு இன்பத்தை நல்கும் பூரணமான பெரிய பொருளாகிய பெருமானே, திருமால் முதலிய மூவருக்கும் பெறற் கரியனவாகிய நின்னுடைய திருவடிகள் நள்ளிரவில் மண் பொருந்தி வருந்த நடந்து போந்து, யாவரினும் தாழ்ந்தவனாகிய யான் தங்கும் மனையை யடைந்து, உயர்ந்த கதவைத் திறக்கச் செய்து, என்னையுட் புறத்தே அழைத்துச் சென்று, மகனே, இது தேவர்களுக்கும் பெறலரியது; இதனை வாங்கிக் கொள்க என்று என் கையில் மன மகிழ்ச்சியுடன் தந்தருளினாய்; உன் திருவருளை என்னென்று புகழ்வேன். எ. று.
பூவருக்கம் - பூ வகைகள். வர்க்கம் என்ற வடசொல் வருக்கம் எனச் சிதைந்தது. “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” என்பது தொல்காப்பியம். திருக்கூத்து, உயிர்கட்கு இன்பம் விளைவிக்கும் அருட் குறிப்புடையது. “நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெந்தை யார் பரதம் தான்” (உண். விளக்) எனப் பெரியோர் கூறுவதறிக. பூரணம் - குறைவிலா நிறைவு. வான்பொருள் - பெரிய பொருள். வடநூலார், இதனைப் 'பிரமம்' என்பர். மூவர், திருமால் பிரமன் உருத்திரன் எனப்படுவர். மூத்த திருவடி, உயர்ந்த திருவடி. இருள் திணிந்த நள்ளிரவு திரவு எனக் குறிக்கப்படுகிறது. முயங்குதல் - சேர்தல். நிலத்தில் அடி பொருந்த வைத்து நடத்தலை முயங்கி நடத்தல் என மொழிகின்றார். மிகவும் தாழ்ந்தவன் எனத் தம்மைக் குறிப்பது வேண்டி, “யாவருக்கும் இழிந்தேன்” என இயம்புகின்றார். எழில் - உயர்ச்சி. சி்வஞானத் திருவருளை நல்குகின்றாராகலின், அதன் அருமை யுணர்த்தற்குத் “தேவருக்கும் அரிது இதனை வாங்கு” என இறைவன் மொழிகின்றார். மனம் சிதைந்த உவப்புடன் தந்தமை கண்டு கூறுதலால் “சிந்தை மகிழ்ந் தளித்தனை” எனச் செப்புகின்றார். நன்றி பெருக வியத்தல் விளங்க “திருவருள் என் னென்பேன்” என்கின்றார்.
இதனால், இறைவன் அளித்த ஒன்று தேவருக்கும் பெறலரிய தெனப்புகழ்ந்தவாறாம். (37)
|