3097. சுற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
மங்றவர்கா ணாதெளியேன் இருக்கும் இடத் தடைந்து
மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனை அங் கழைத்து
நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
நல்கியநின் பெருங்கணை நட்பினைஎன் என்பேன்
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே
உரை: பற்றுக்கள் அற்றவர்க்கும், அறாதவர்க்கும் பொதுவாக நின்று அம்பலத்தில் திருநடனம் புரிகின்ற அருட்குருவே, சச்சிதானந்தமான பரம் பொருளே, கற்றவர்களின் கருத்தில் முக்கனிகளின் இரசம் போல இனிக்கின்ற கழலணிந்த திருவடிகள், வருந்த விரைவாக நடந்து இரவுக் காலத்தில் மற்றவர்கள் கண்ணுக்குத் தோன்றாமல் எளியவனாகிய யான் இருக்கின்ற இடத்தை யடைந்து, வீட்டின் கதவைத் திறக்கச் செய்து வலிய அழைத்து, நல்ல தவமுடையோர்க்கும் பெறலரியதாகிய நினது பெரிய கருணை மிக்க அன்பை என்னென்று சொல்லுவேன். எ. று.
பற்றவர் - யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் உடைய உலகவர். அற்றவர் - அவ்விரண்டினையும் அற்ற துறவோர். இரு திறத்தார்க்கும் ஒப்ப நிற்பது தோன்ற “பொதுவினில்” என்ற சொல் நிற்கிறது. பொது தில்லை யம்பலத்தையும் குறிப்பது அறிக. அருள் ஞானம் தருதலால், “அருட் குருவே” எனவும், சத்தாயும் சித்தாயும் ஆனந்தமாயும் உள்ள பரம் பொருளே என்றற்குச் “சச்சி தானந்த பரம் பொருளே” எனவும் இயம்புகின்றார். “கற்றவர்களுண்ணும் கனியே போற்றி” (ஆரூர்) எனப் பெரியோர்கள் கூறுதலால் கனியை விளக்குவார் போல், “கற்றவர் தம் கருத்தினில் முக்கனி ரசம் போய் இனிக்கும் கழலடிகள்” என்று மொழிகின்றார். முக் கனிகள், மா பலா வாழை என்ற மூவகைக் கனிகள். இசரம் - சாறு. கழலடி - வீரதண்டை யணிந்த திருவடிகள். மற்றவர் காணாதபடி வருதலின், “கடிது நடந்து” எனக் கூறுகிறார். அச்சத்தால் ஒரு பால் ஒடுங்கின என்னை வலிதிற் பிடித்து இழுத்து முன்னிறுத்தினமை புலப்பட, “வலிந்தெனை அங்கழைத்து” என உரைக்கின்றார். நல்ல தவம் புரிந்த பெரு மக்கட்கும் பெறற்கரியதாகலின், இதனைப் பெற்றுக் கொள்க எனச் சொல்லித் தந்தமையின், “நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கென வென்கரத்தே நல்கிய நின் பெருங்கருணை” என மொழிகின்றார். வேண்டிய வேண்டியாங் கெய்த உதவுவது தவமாயினும், இஃது அத்தவத்தார்க்கும் பெறலரிதென விளக்குதற்கு “நற்றவர்க்கும் அரிது” என்று கூறுகிறார். “வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம் ஈண்டும் முயலப்படும்” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. பெறற்கரிய தொன்றை வலிதிற்றருவது பேரருட் செயலாதலால் “பெருங்கருணை” என்று போற்றுகின்றார். கருணை காரணமாக வுளதாகும் நட்பு, “கருணை நட்பு” எனப்படுகிறது.
இதனால், கருணை காரணமாக நட்புற்று அரிது வலியத் தந்ததை வியந்து கூறியவாறாம். (38)
|