3098.

     கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
          கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
     மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
          மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
     பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
          பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
     அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
          னந்தவுரு வாதிநடம் ஆடுகின்ற அரசே.

உரை:

     அருளே நிறைந்த பெரிய கடல் போன்றவனே, தில்லையம்பலத்தில் மேலான ஆனந்த வுருவு கொண்டு நடனம் புரிகின்ற அருளரசே, கருணைத் திருமேனியுடன் அடியார்களின் உள்ளக் கோயிலில் எழுந்தருள்கின்ற கழலணிந்த திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்தும் படி இரவிலே நடந்து மருட்சி நிறைந்த சிறியவனாகிய யான் இருக்குமிடத்தை அடைந்து அழகிய கதவைத் திறந்து விருப்புடன் என்னை அழைத்து, “மகனே, பொருள் நிறைந்த நான் தரும் இதனை வாங்குக என்று சொல்லி என் கையில் நன்கு பொருந்தக் கொடுத்தருளிய நின்னுடைய பொன்னான திருவருளை யான் என்னென்று பாராட்டுவேன். எ.று.

     அளவிறந்த அருட்பெருக்கின் திருவுருவாய் விளங்குதல் தோன்ற “அருள் நிறையும் பெருங்கடலே” எனவும், தில்லைப் பொன்னம்பலத்தில் இன்ப வடிவாய் நின்று திருக்கூத்து ஏற்றுதலால், “அம்பலத்தில் பரமானந்த உருவாகி நடம் ஆடுகின்ற அரசே” எனவும் போற்றுகின்றார். மெய்யடியார்களின் திருவுள்ளத்தில் எழுந்தருளும் இறைவன் திருவுருவமும் அருளே ஆகி யிருத்தலால், “கருணை வடியாய் அடியார் உள்ளகத்தே அமர்ந்த கழலடிகள்” என்று உரைக்கின்றார். நிலத்தில் படாத திருவடி பட்டுப் பொருந்திய வழிக் கன்றுதல் நிறைந்து “வருந்தியிட” என்றும், இரவில் நடப்பதற்கு ஆற்றாமை பற்றிக் “கங்குலிலே நடந்து” என்றும் வருந்துகின்றார். மருள், மருளுணர்ச்சி, மருளாவது பொருளல்லவற்றை பொருள் என்று உணரும். பிறழ் வுணர்ச்சி அது தன்னை யுடையவரைச் சிறுமைப் படுப்பது பற்றித் தன்னை வள்ளற் பெருமான், “சிறியேன்” என்று செப்புகின்றார். மணிக்கதவம் - அழகிய கதவு. மணிகட்டிய கதவுமாம். அஞ்சி ஓடாதபடி பிடிப்பதற்கு இன்சொல் உதவுதலின் 'மகிழ்ந்தழைத்து' எனக் கூறுகிறார். பொருள் நிறையும் இது, மெய்ம்மைப் பொருளாய்ப் பயன்படும் இது, பெற்றுக் கொள்க என ஏவுகின்றாராதலின், இங்கே வாங்கு எனக் கூறுகிறார். பொருந்தளித்தலாவது தவறிக் கீழே வீழ்ந்து ஒழியாதபடி அமையக் கரத்தே பொருந்தளித்தருளிய எனவும், அருமை பற்றிப் 'பொன்னருள்' எனவும் புகழ்கின்றார்.

     இதனால் திருவருளின் அருமையும், அதனைக் கொடுத்தருளிய சிறப்பும் விளங்க வுரைத்தவாறாம்.

     (39)