3099. அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
தெருளுவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
மகிழ்ந்துதிரு அருள்வழிவே வாழ்கஎன உரைத்தாய்
இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே.
உரை: எல்லாம் செயல் வல்லவனாய் எழுந்தருள்கின்ற, பசுபதியே, அருளுருக் கொண்டு படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்கின்ற திருவடிகள் அசைந்து வருந்த, இரவுக் காலத்தில் யான் இருக்கின்ற இடத்திற்குத் தெளிவின் உருவாய் நடந்து வந்து, தெருவாயிற் கதவைத் திறக்கச் செய்து, சிறியவனாகிய என்னை அழைத்து, என்னுடைய செம்மையான கையில் ஒன்றைக் கொடுத்து, மருட்கையுடைய மற்ற மக்களைப் போல் மனம் மயங்காமல் மகிழ்ச்சியுடன் என் மகனே, திருவருளின் வழி நின்று வாழ்வாயாக எனச் சொல்லி யருளினாய்; அறியாமையால் இருண்ட மனத்தையுடைய கொடியவனாகிய யான் இதனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தேனோ, அறியேன். எ.று.
எல்லா வல்லமையும் உடையவனாதலால் சிவபெருமானை, “எல்லாம் வல்லவனாகி இருந்த பசுபதியே” என ஏத்துகின்றார். திருவருளே உருவாய் அமைந்து படைத்தல், காத்தல், அழித்தல், அளித்தல், மறைத்தல் என்ற தொழில்கள் ஐந்தினையும் செய்தருளுவது பற்றி, “அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்” என்று சிறப்பிக்கின்றார். அசைதல், சோர்தல். இரவுக் காலத்தில் நெடிது நடந்து வருவது பற்றி, “அசைந்து வருந்திட இரவில் நடந்து” எனவும் இருள் இரவாயினும் தெளிவுறவந்தமை விளங்க தெருளுருவின் “நடந்து” எனவும் உரைக்கின்றார். செங்கை - செம்மையான கை, வெறுங் கை என்றுமாம். மருளுரு மயங்கிய தோற்றம், மயக்க வுணர்வுடையவர்களை “மருளுருவின் மற்றவர்” எனக் கூறுகின்றார். திருவருள் காட்டுகின்ற நெறியிலேயே நீயும் வாழ்வாயாக, அதனை உனக்குக் காட்டுவது உனக்கு யான் கொடுக்கின்ற ஒன்று எனக் கூறுவாராய், “மகனே மகிழ்ந்து திருவருள் வழியே வாழ்க என உரைத்தாய்” என்று வியந்து பேசுகிறார். அறியாமையால் இருண்ட மனமுடையவர் தவறான வழிகளில் சென்று துன்புறுதல் போல யானும் வருந்துபவனாக என்னையும் ஆட்கொண்டு இதனை அருளினை யாதலால் இதற்கு யான் முற்பிறப்பில் என்ன தவம் செய்தேனோ என்று நன்றி நவில்கின்றாராதலால், “இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்” என்று மொழிகின்றார்.
இதனால், தனக்கு அளித்த திருவருள் எனது தவப் பயனேயாம் என இயம்பியவாறாம். (40)
|