3100. முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே.
உரை: எல்லாம் முற்றும் உணர்ந்த பெருமக்களின் சென்னியில் விளங்கும் முடிக்கு அழகுசெய்யும் மணியாய் படைப்பு முதலிய முப்பொருளுமாய் விளங்குகின்ற உன்னுடைய ஒப்பில்லாத திருவடித் தாமரைகள், பேய்களும் வழி யறிந்து இயங்குதற்கு வியலாத நள்ளிரவிலே வருந்தும்படி விரைந்து நடந்து நாயேன் இருக்குமிடத்தை அறிந்து அடைந்து குற்ற முண்டாகதபடி, என்னை அன்போடு அருகில் அழைத்து, மகனே, இதனைப் பணிவோடு வாங்கிக் கொள்க என்று சொல்லிக்கையில் பொருந்தக் கொடுத்து இனி என்னைத் தொழுது பாடுவாயாக என்று சொல்லி யருளிய பசுபதியாகிய உன்னுடைய தூய திருவருட் பெருமையை யான்யாது சொல்லி வியப்புறுவேன். எ. று.
கற்பவை யனைத்தும் கசடறக் கற்று அதற்குத் தக நின்று சிறக்கும் பெரியோர்களை ஈண்டு “முழுதும் உணர்ந்தவர்” என்று மொழிகின்றார். முடி மேல் முடி அணிதலின்மையின் முதலில் நிற்கும் முடி சென்னிக்காயிற்று. இப் பெருமக்களை விண்ணவர் என்பதும் உண்டு. விண்ணோர்க்குத் தலையில் மணிமுடி இருத்தலின், அந்த முடியின் மணியாய் இறைவன் திருவடி திகழ்கிறது என்பதற்கு “முடிக்கு மணியாகி” எனக் கூறுகின்றார். முப்பொருளாவன படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களுக்கும் பொருளாகிய பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூன்று பதிப் பொருள்களைக் குறிக்கும். இறைவன் திருவடிக்கு ஒப்புவேறில்லாமை பற்றி, “ஒப்பில் அடிமலர்கள் என வுரைக்கின்றார். கழுது - பேய். பேய்களும் இயங்க முடியாத நள்ளிரவு என்றற்கு, “கழுதும் உணர்வரிய நடுக் கங்குல்” என உரைக்கின்றார். “கழுது கண்படுக்கும் பாணாள் கங்குல்” (திருவிளை) என்று பரஞ்சோதியாரும் கூறுவது காண்க. கருதுமிடம், தக்கதென எண்ணித் தங்கும் மனை. எழுப்புகின்ற தனது குரல் ஓசையில் இனிது உறங்கும் பிறர் விழிப்புற்று வருத்தமுறாதபடி என்றற்கு, “பழுதுபடா வண்ணம்” எனப் பகர்கின்றார். விழித்தெழுந்தவர் தெளிவின்றி அஞ்சி வெருவாமைப் பொருட்டுப் “பரிந்தழைத்து” என்று கூறுகின்றார். கொடுக்கப்படும் பொருளின் பெருமையை உணர்த்தற் பொருட்டு, “இதனைப் பணிந்து வாங்குக” என்றும், பின்னர் செய்வது இது வென்பாராய் “தொழுதெனைப் பாடுக” என்றும், இவ்வாறு அருளிய நலத்தின் நன்மையைத் “தூய அருட்பெருமை” என்றும் சொல்லி இன்புறுகின்றார். பாணி - கை.
இதனால், திருவருட் பெருமையை வியந்தவாறாம். (41)
|