3102.

     சூரியசந் திரரெல்லாந் தோன்றாமைவிளங்கும்
          சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து
     கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்
          கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து
     காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்
          கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்
     ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த
          ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.

உரை:

     அரிய ஞானிகளின் அளவெல்லை கடந்து, அப்பாலும் கடந்து விளங்கும் ஆனந்த மயமான அம்பலத்தில் திருக்கூத்தியற்றும் அருளரசே, சூரியன் சந்திரன் என்ற ஒளிப் பொருள்கள் தமது ஒளி மழுங்கி மறைந்தொழியும் தனிப் பேரொளிப் பொருளாகும் திருவடி யிரண்டும் வருந்துமாறு மண் மீது நடந்து, கூர்த்த மெய்ஞ்ஞானம் என்பது ஒரு சிறிதும் இல்லாத கொடியவனாகிய யான் இருக்கும் இடத்தைக் குறிக்கொண்டு, இராக் காலத்தில் போந்து ஒரு காரியம் உளது எனச் சொல்லிக் கூவிக் கதவைத் திறக்கச் செய்து என் கையில் ஒன்றைக் தந்துதவிய உனது கருணை நலத்தை என்னென்று சொல்லுவேன். எ.று.

     ஆரியர் - அரிய விஞ்ஞானிகள். அவர்கள் கண்டுணர்ந்த அளவனைத்துக்கும் அப்பாலான அளவுகளுக்கு அப்பாற் பட்டது. அம்பலவாணனுடைய அம்பலத்தின் பெருமை என்றற்கு “ஆரியர்தம் அளவு கடந்து அப்பாலும் கடந்த ஆனந்த மன்று” என்று வள்ளலார் எடுத்துரைக்கின்றார். “அண்ட பாரிருளூடு கடந்தும்பர் உண்டு போலுமோர் ஒண்சுடர் அச்சுடர், கண்டிங் காரறிவார்” (சித்த) என நாவுக்கரசர் கூறுவர். தனிப் பெருஞ் சோதியாகிய சிவத்தின் இயல்பைச் “சூரிய சந்திரரெல்லாம் தோன்றாமை விளங்கும் சுயஞ்சோதியாகும்” என்று சொல்லுகிறார். திருமாளிகைத் தேவர், “இரவி நூறாயிரத் திரள் ஒப்பாம் தில்லைச் சொக்கர் அம்பவர்” (திருவிசைப்) என்பது காண்க. அடித்துணை, திருவடியிரண்டு. கூரிய மெய்யறி வென்பதை மணிவாசகப் பெருமான், “கூர்த்த மெய்ஞ் ஞானம்” (சிவபு) எனக் கூறுகின்றார். உண்மை காண மாட்டாத தடித்த சிற்றறிவேயுடையவன் என்றற்குக் “கூரிய மெய்யறி வென்பது ஒருசிறிதும் குறியாக் கொடியேன்” எனத் தம்மையே பழிக்கின்றார். குறித்தல், ஈண்டு நிலைத்தல் மேற்று. கூரிய அறிவு இல்வழிக் கொடிய நெறி தவறிய நினைவும் செயலும் உளவாமாகலின், “குறியாக் கொடியேன்” என்று கூறுகின்றார். கதவு திறக்க மறாமை கருதி, “காரியம் உண்டு” எனக் கூவுதல் வேண்டப்படுகிறது. உறக்கத்தில் இருப்பார்க்கு மெல்லக் கூறின் செவிப் படாமை கருதிக் “கூ” என்கின்றார். “கூவுதல்” உரத்த ஒலி செய்தழைத்தல், கூவி வற்புறுத்தி நல்குவது பேரன்பர் செய்தல் இனிது விளங்குவதால், “உன் கருணையை என்னென்பேன்” என வுரைக்கின்றார்.

     இதனால் இறைவன் தனிப் பேரருளை விதந்தோதிப் புகழ்ந்தவாறாம்.

     (43)