3103. தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிடம்போந்
தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
புலையொழிந்த நிலைதனிலே பொந்துகஎன் றுரைத்தாய்
சிற்போத மயமான திழிமணிமன் றிடத்தே
சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே.
உரை: ஞான வுரை மயமான அழகிய மணி யொளி திகழும் தில்லையம்பலத்தின்கண் சிவானுபவ மயமாகத் திருக்கூத்தாடும் அருளரசே, தற்போதம் தலைதூக்காமல் ஒடுங்கும் மனநிலையின்கண் விளங்கித் தோன்றுகிற நின் திருவடித் தாமரைகள் வருந்துமாறு தன்னந்தனியாகப் பகற் போது கழிந்த இராக் காலத்தில் மண்மேல் நடந்து யான் இருக்குமிடம் போந்து, உயர்ந்த வாயிற் கதவைத் திறக்கச் செய்து எளியவனாகிய என்னை யழைத்துப் பொன் போன்றதென அழகு ஓதும் வண்ணம் ஒன்றை என் கையில் கொடுத்துப் புலையொழுக்க மில்லாமல் பொருந்தி வாழ்க என அறிவுறுத்தருளினாய்; இதற்கு யான் யாது சொல்வேன். எ.று.
சிற்போதம் - ஞான வுரை. வந்து காண்பார்க்கு வேண்டும் நன்ஞானம் வழங்குவது போலும் தோற்ற முடைமை பற்றித் தில்லையம்பலத்தைச் “சிற்போத மயமான திருமணி மன்று” எனச் சிறப்பிக்கின்றார். சிவ மயமாம் அனுபோகம் - சிவஞானத்தாற் பெறலாகும் சிவானந்தானுபவம். திருக்கூத்துக் காண்பதாற் பெற வருவதாகலின், “அனுபோகத் திருநடம்செய் யரசே” என எடுத்தோதுகிறார். தற்போதம் - யான் எனதென்னும் தன் முனைப்பு. “யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும் இக்கோணை” (சிவ. சித்தி : 10:2) என அருணந்தி சிவனார் விளக்குவர். தன் முனைப் பற்றுக் கருவி கரணங்கள் செந்நெறியில் நிற்க அமையும் செவ்வியில் சிவத்தின் திருவடிக் காட்சி பெறலாம் என்னும் ஞான நெறியை வள்ளற் பெருமான் உரைத்தருளுகின்றாராகலின், “தற்போதம் தோன்றாத தலந்தனிலே தோன்றும் தாள் மலர்கள்” என எடுத்தோதுகின்றார். தோன்றாத் தனித்துணை செய்பவராகலின், “தனித்து நடந்தரு”ளினார் என்று கூறுகின்றார். எற்போது - பகற் காலம். இறைவனது திருவருட் பெருமையை நோக்கித் தமது சிறுமையை எண்ணுகின்றாராதலால், வள்ளலார் தம்மை 'எளியேன்' எனக் குறிக்கின்றார். பொற்பு ஓது அவ்வண்ணம் என்பது பொற்போத வண்ணம் என வந்தது. பொருளுருவி லன்றி அழகுறச் சொல்லு மளவாய் உளதாகும் ஒன்று என்று கொள்க. புலை யொழிந்த நிலை - புலை யொழுக்கமில்லா நிலை. பொய், களவு, காமம் முதலியன புலை யொழுக்கமாகும்.
இதனாற் புலையொழுக்க மின்றி நன்னெறியில் வாழ்க என அறிவுறுத்தியவாறாம். (44)
|