3104. கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
கரையாது நிறைந்ததிருக் கழலடிகள் வருந்த
வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
நடம்புரியும் பெருங்கருணை மணியே.
உரை: நல்ல வேதியர் நின்று துதிக்க மணி யிழைத்த அம்பலத்தின் கண் இன்பத் திருக்கூத் தியற்றும் பெரிய கருணைக்கு நாயகமாக விளங்கும் பெரிய மாணிக்கமணியே; கற்பனைகள் அனைத்தும்போய் மறைந்தொழிந்த நிலையில் மறைந்தொழியாமல் நின்று திகழும் கழலணிந்த திருவடிகள் மண்ணிற்பொருந்தி வருந்துமாறு மலைமகளின் துணையுமின்றி, ஒப்பற்ற தனி முதல்வனாய் இரவின்கண் விரைவுடன் நடந்து போந்து தெருவாயிற் கதவைத் திறக்கச் செய்து, அற்பனாகிய என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு திருமுன்பு அழைத்து, அடியேனுடைய கையில் ஒன்றைக்கொடுத் தாண்டாய்; அதற் கேதுவாகிய நின்னுடைய திருவருளை என்னவென்று புகழ்ந்துரைப்பேன். எ.று.
வேதங்களை பயின்று நல்லொழுக்கத்தை மேற்கொண்டிருக்கும் வேதியர்களை “நற்பனவர்” என்று சிறப்பிக்கின்றார். அம்பலத்தின் நடுவே நின்று ஆடுமாறு தோன்ற “மன்றகத்தே நடம் புரியும்” எனக் கூறுகிறார். அருளே திருமேனியாதலால் நடராசப் பெருமானை, “பெருங்கருணை நாயக மாமணியே” யென்று போற்றுகின்றார். இல்லது புனைதல் கற்பனை; சிறியதைப் பெரியதாகவும், பெரியதைச் சிறியதாகவும், இல்லாததை உள்ளதாகவும், உள்ளதை, இல்லதாகவும் புனைந்து, நினைத்தலும் உரைத்தலும் செய்தலுமாகும். இத்தகைய கற்பனைக்கண் பொய்ம்மை புனைவு வாயிலாகக் கலத்தலால் அது விலக்கப்படுகிறது என வுணர்க. புனைதல் கலையாகும்; அது பொய் கலந்த வழி, பயனில் கற்பனையாகும்; மெய்ம்மை கலந்த வழிப் பயனுள்ள கற்பனையாய் யாவர்க்கும் இன்பம் செய்யும். பொய்ந்நெறிக் கற்பனைகள் உலகியலில் தலைமையும் பெருமையும் பெறுவதால், கற்பனையை உண்மைச் சமயநெறி விலக்குகிறது. அதனால், “கற்பனைகள் எல்லாம் போய்க்கரைந்த தலம்” வேண்டுகிறார். கற்பனை சிறிதும் கலவாது உள்ளதன் உண்மையுள்ளவாறு விளங்கும் தூய நிலையத்தில் சிவம் பிரகாசிப்பது இயல்பாகலின், “கற்பனைகள் எல்லாம் போய்க் கரைந்த தலந்தனிலே கரையாது நிறைந்த திருக்கழலடிகள்” என்று இயம்புகின்றார். கரைதல், உருவாய்த் தோன்றி அருவமாய் மறைதல் மலைமகளாதலின், உமாதேவியை “வெற்பன்னை” என்கிறார். வெற்பன்னை. வெற்பனை என வந்துளது. பிரியாப் பெருமடந்தையாகலின், அவளையின்றி வந்ததை “வெற்பனையுமின்றி ஒருதனியாக நடந்து” என விளம்புகின்றார். தாழிட்டடைக்கப்பட்டிருந்த கதவைத் தாழ் நீக்கித் திறந்த செயலைக் “காப்பவிழ்க்கப் புரிந்து” என்கிறார். அற்பன் - புல்லியவன்.
இதனால், கற்பனை கடந்த பெருமான் தன்பாற் போந்து அருளிய திறம் கூறியவாறாம். (45)
|