3105. ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே
அடைந்துகத வந்திறப்பித் தனபொடெனை அழைத்து
நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே
நண்ணிநீ எண்ணியவா நடத்துகஎன் றுரைத்தாய்
இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை
என்புகல்வேன் மணிமன்றில் இலங்கியசற் குருவே.
உரை: மணி யிழைத்த அம்பலத்தின்கண் விளங்குகிற சற்குருவே, சிவமென ஒன்றாகியும், சிவமும் சத்தியுமென இரண்டாகியும், இரண்டும் ஒன்றிய சிவசத்தி யென்ற நடுநிலையிற் பெறற் பாலதாகிய அனுபவமயமாய் விளங்கும் திருவடிகள் வருந்தும்படி அன்றொருநாள் இரவில் மண்ணிற் பொருந்த நடந்து, யான் இருக்கும் இடத்தையடைந்து, தெரு வாயிற் கதவைத் திறக்கச் செய்து என்னை அன்புடன் அருகழைத்து, என் கையில் மிகவும் பொருந்துமாறு ஒன்றைக் கொடுத்து, இங்கேயே இருந்து நீ எண்ணியபடியே வாழ்வை நடத்துக என்று உரைத்தருளினாய்; அது போல இந்நாளிலும் வந்து அதனையே சொல்லி யருளிய உன்னுடைய திருவருளை என்னென்று சொல்லுவேன். எ. று.
ஞானமாகிய சிவமென ஒன்றாய், கிரியையாகிய சத்தியென ஒன்றாய், ஞானமும் சத்தியும் எனச் சமநிலைக்கண் இரண்டாய் இரண்டின் கலப்பாயுள்ள சதாசிவத்தின் ஞானக் கிரியைகளின் அனுபவத்தை இரண்டு திருவடிகளாக நிறுத்திக் கூறுகின்றாராகலின், “ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே உற்ற அனுபவமாய் ஒளிர் அடிகள்” என்று எடுத்தோதுகின்றார். இதனாற் சதாசிவ தத்துவானு பவம் காட்டப்படுகிறது. சிவ தத்துவமும் சத்தி தத்துவமும் ஒன்றாயினும் அனுபவவெல்லைக்கண் வாராமை பற்றி, இரண்டாகிய சதாசிவ தத்துவம், ஞானக்கிரியா வுருவமாய் அனுபவ மயமாய்க் கருதப்படுதலின், இரண்டையும் இரு திருவடிகளாக உருவகம் செய்யப்பட்டுள்ளன என அறிக. அன்று - முன்பொருநாள். இராப்பொழுதில் கதவு காப்பிட்டு அடைக்கப்பட்டிருப்பது கொண்டு, “கதவம் திறப்பித்து” எனவும், கிடந் துறங்கின என்னை யெழுப்பித் தன்பால் வருவித்து அன்பு செய்தமை புலப்பட “அன்போடு எனை யழைத்து” எனவும் இயம்புகின்றார். நன்று ஆர - நன்கு பொருந்த. இவ்விடத்தே யிருந்து கொண்டு நீ கருதிய சிவஞானச் செயல்களைச் செய்து கொண்டு உறைக என்று அறிவுறுத்தியது கூறலுறுபவர், “இங்கே நண்ணி நீ எண்ணியவா நடத்துக என்றுரைத்தாய்” என்று கூறுகின்றார். மறுவலும் ஒருநாள் போந்து முன்னாள் மொழிந்ததை நினைவு படுத்தி வற்புறுத்தினமை விளங்க “இன்று ஆர வந்து அதனை உணர்த்தினை” என வுரைக்கின்றார்.
இதனால் வடலூர்க் கண்ணிருந்துகொண்டு சிவஞானச் செயல்களை செய்யத் திருவருள் பெற்றமை உரைத்தவாறாம். (46)
|