3106. எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே
போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே
தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாங் மலர்ந்தாய்
இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பாதுவில்
இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே
உரை: தில்லையம்பலத்தின்கண் இன்பத் திருக்கூத்து ஆடுகின்ற என்னுடைய தலைவனே, எவ்விடத்தும் விளங்குவதாய், இன்ப மயமாய் எனது உணர்வுக்கு உணர்வு தருவனவாகவுள்ள திருவடிகள் இரண்டும் வருந்துமாறு, இருள் மிகும் இரவின்கண் மண் மேல் நடந்து, நான் இருக்கும் இடத்துக்கே வந்து, அழகிய தெருவாயிற் கதவைத்தாழ் நீக்கித் திறக்கச் செய்து, அவ்விடத்தே தங்கிய அடியவனாகிய என்னைத் தன்பால் அழைத்துக் கையில் ஒன்றைக் கொடுத்து, எல்லாரிடத்து அன்புற்று வாழ்வாயாக என ஒப்பற்ற தன் வாயைத் திறந்து உரைத்தருளினாய்; இவ்விடத்தே உனது திருவருட் பெருமையை என்னென்று சொல்லுவேன். எ.று.
உலகுயிர்கள் இன்பம் பெறல் வேண்டி ஆடும் திருக்கூத்தாகலின், “பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என்னுடைய நாயகனே” எனக் கூறுகின்றார். பொது - தில்லையம்பலம். இறைவனது விளக்க மில்லாத இடமே யில்லையாதலால், “எங்கும் விளங்குவதாகி” என்றும், இன்ப நாட்டமே எவ்வுயிரிடத்தும் காணப்படுதலின், “இன்ப மயமாகி” என்றும், உயிர்க்குயிராய் உண்மையுணர்வு தந்த வண்ணம் இருத்தல்பற்றி “என்னுணர்வுக்குணர்வு தரும் இணையடிகள்” என்றும் விளம்புகின்றார். இருள் மிக்க இரவுக் காலம், “பொங்கும் இரவு” எனப்படுகிறது. பொங்குவது இருளாகலின், அது வருவிக்கப்பட்டது. மணிக் கதவு - அழகிய கதவு. காப்பிடுதல் - தாழிட்டிறுக்குதல் தயவு - அன்பு. சொல்லின் இனிமை பற்றித் “தனித் திருவாய்” எனப் புகழ்கின்றார். திருவாய் மலர்தல் - வாய் திறந்து உரைத்தல். உயர்ந்தோர் பேசுவதை இவ்வாறு வழங்குவது மரபு.
இதனால், யாவரிடத்தும் தயை புரிந்து வாழ்க என அறுவுறுத்தப்பட்டமை தெரிவித்தவாறாம். (47)
|