3107. சித்தெவைபும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
மத்தஇர விடை நடந்து வந்தருளி அடியேன்
வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே.
உரை: முத்தான்மாக்களின் கூட்டம் இருந்து காணத் தில்லையம்பலத்தில் இன்ப நடனத்தைச் செய்கின்ற மூன்றாகிய கண்கனையுடைய இன்பமான, சிவந்த மாணிக்க மலையாகிய பெருமானே, அணிமா முதலிய சித்துக்களின் நுட்பம் யாவும் விளக்க முறுகின்ற சுத்த சிவஞானமாய்ச் சித்தத்தில் இனிக்கும் திருவடிகள் மண் பொருந்தி வருந்துமாறு மிக்க இருளிரவில் நடந்து போந்து, அடியவனாகிய யான் உறைகின்ற வீட்டில் கதவைத் திறக்கச் செய்து உள்ளே புகுந்து, தமக்குரிய அத்தகுதி குன்றாமல் என்னை முன்னுற அழைத்து. என் கையில் ஒன்றைத் தந்தருளினாய்; தாயினும் சிறந்த அன்பு கொண்ட ஐயனே, உன்னுடைய திருவருளை என்னென்று புகழ்வேன். எ.று.
முத்தி பெறுதற்குச் சமைந்த ஞானவான்களைச் சீவன் முத்தர்களெனவும் வழங்குவர். உடலோடு கூடியிருந்தே சிவஞான வொழுக்கங்களால் முதிர்ந்து சிவம் பெறுதற்கு அமைந்தவர்கள் என்பது கருத்து. இப்பெருமக்கள் கூடியிருந்து திருக்கூத்துக் கண்டு இன்புறுகின்றவர்களாதலால், “முத்தர் குழுக் காண் மன்றில் இன்ப நடம் புரியும் மணிமலையே” என்று மொழிகின்றார். இன்ப வடிவில் மூன்று கண்களுடன் சிவந்த மாணிக்க மணியொளிரும் மலைபோல் தோன்றுதல் விளங்க, “முக்கணுடை யானந்தக் செக்கர் மணிமலையே” எனப் போற்றுகின்றார். சித்து, அணிமா, மகிமா முதலாக வுரைக்கப்படும் எண் வகைச் செயல்களில் வல்லவராம் நுண்ணறிவும் ஆற்றலும் உடைமை. இந்த நுண்கலையும் சிவஞானம் கைவருமிடத்து இனிது விளங்குவதாம் என்றற்குச் “சித்தெவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய்” எனக் கூறுகின்றார். வியத்தி - விளக்கம். சிவ சித்து - சிவஞானம். இன்பத்துக் கேதுவாதலால் சுத்த சிவஞானம் என்று சொல்லுகின்றார். சிந்திக்கும் சிந்தைக்கண் தேனூற நிற்பது பற்றி, “சித்தமதில் தித்திக்கும் திருவடிகள்” என்று இயம்புகிறார். “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன. . . ஐயாறன் அடித்தலமே” (ஐயாறு) எனத் திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க. மத்த இரவு - மயக்கத்தை யுண்டு பண்ணும் இருள் திணிந்த இரவுக் காலம். வாழும் மனை - உறையும் வீடு. தகவு - ஒன்று கொடுத்தற்குரிய தகுதி. கொடுப்பார் - கொடுக்கப் பெறுவார் பெற இருபாலும் நிறைந்து விளங்கும் தகுதி சிதையாமல் கொடுக்கும் திறம் புலப்பட, “அத்தகவின்” என்று குறிக்கின்றார். கொடுக்குங்கால் முகத்தின்கண் மிக்கு நின்ற அன்பைக் கண்டு வியந்து கூறுதலால் “அன்னையினும் அன்புடையாய்” எனவுரைக்கின்றார்.
இதனால் அருட் கொடையின் நலம் பாராட்டியவாறாம். (48)
|