3108. சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
உரை: கெடுவது நீங்குமாறு பெரிய தவத்தையுடைய நல்லவர்கள் அடைந்து மனம் மகிழ்வுடன் போற்ற உயர்ந்த அம்பலத்தின்கண் இன்பத் திருக்கூத்தாடுதலையுடைய பரம்பொருளாகிய சிவபெருமானே, சகல நிலையும் கேவல நிலையும் போந்து மீளவும் தாக்காத இடமாகிய சுத்த நிலைக்கண் தற்பரமாய் விளங்குகின்ற நின் திருவடித் தாமரைகள் மண்ணிற் பொருந்தி வருந்துமாறு பகற் போது கழிந்த நள்ளிரவுக் காலத்தில், அடியேனாகிய யான் இருக்குமிடத்துக்கு நடந்து வந்து அழகிய வாயிற் கதவைத் திறக்கச்செய்து உட்புகுந்து, “புகலிடம் பெற எம்பால் வருக” என அழைத்து என்னுடைய கைக்கண் நன்றாகப் பொருந்துமாறு ஒன்றைக் கொடுத்தருளினாய்; இந்த அழகிய திருவருட் பெருமையை என்னென்று புகழ்வேன். எ.று.
உகுதல் - வீணே கெடுதல்; ஈண்டு மீளாப் பிறவிக் கடலில் வீழ்ந்தழுந்துதல். சிவப் பேற்றுக்குரிய பெரிய தவத்தைச் செய்த ஞானவான்களைப் “பெருந்தவர்” என்று சிறப்பிக்கின்றார். தில்லையம்பலத்தை யடைந்து திருநடம் கண்டு கும்பிட்டுப் பரவுவது இயல்பாதலால் “உற்று மகிழ்ந்தேத்த” எனவும், அதனால் திருச்சிற்றம்பலம் உயர்வு மிக்க தென்றற்கு “உயர் பொது” எனவும் உரைக்கின்றார். மலம் மாயை கன்மம் என்ற மூன்றும் கலந்தது சகலம்; மலம் மாத்திரம் கலந்தது கேவலம்; மல முதலிய யாதுமில்லாதது சுத்தம். சுத்த நிலையை எய்திய ஆன்மா சிவத்தைத் தனிப் பரமாய்க் கண்டு இன்புறுவதும், சிவம் சுத்தான்மாவுக்குத் தற்பரமாய் நின்று சிவபோகம் அருளுவதும் பற்றி, “சகலமொடு கேவலமும் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள்” என்று விளக்குகின்றார். தற்பரம் - தானே தனக்குப் பரமாவது. தாள் மலர் - திருவடிகளாகிய தாமரை மலர்கள். நள்ளிரவை வற்புறுத்தற்குப் “பகலொழிய நடுவிரவில்” என்கிறார். பரியுமிடம், விரும்பி யுறையுமிடம். மணிக்கதவு - அழகிய கதவு; மணி கட்டிய கதவு எனினும் பொருந்தும். பெருமனைத் தலைவாயிற் கதவுகளில் வருவோர் வரவு தெரிவிக்க மணியமைப்பது பண்டையோர் மரபு. புகல் - காப்பிடம். வலிய வந்து நன்பொருளை நல்குவது பற்றி, “பொன்னருள்” என்று பாராட்டுகின்றார். மாற்றில்லாத உதவியாதல் பற்றி, “என்னென்பேன்” எனவுரைக்கின்றார்.
இதனால், புகலாகும் நல்ல தொன்றை அருளியது தெரிவித்தவாறாம். (49)
|