3109.

     உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்
          உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்
     கள்ளமனத் தேனிருக்கும் இடந்தேடி அடைந்து
          கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து
     நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து
          நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்
     தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்
          செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே.

உரை:

     மெய்யன்பர்கள் தம் உள்ளத்தில் தெள்ளிய அமுதம் போல் இனிக்கின்ற செழுமை வாய்ந்த கனி போன்றவனே, அழகிய அம்பலத்தின்கண் ஆடல் புரிகின்ற தலைவனே, உன்னை நினைந்து உள்ளம் உருகுங் காலத்தே ஞானவொளி காட்டி விளங்குகின்ற சிறந்த தாமரை மலர் போலும் சிவந்த நின் திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்துமாறு, உவகையுடன் வந்தருளி, கள்ளம் பொருந்திய உள்ளமுடைய நான் இருக்குமிடந் தேடியடைந்து, வாயிற் கதவைத் திறக்கச் செய்து, என்னை யருகழைத்து, உலகினிடையே உனக்கு இதனை நாம் நல்கியுள்ளோம்; நீ மனம் களிப்புற்று நாளும் உயிர்கட்கு நலம் புரிந்து வாழ்வாயாக என உரைத்தருளினாய்; நின் திருவருளை என்னென்பேன். எ.று.

     நினைந்த விடத்து அள்ளுறும் இனிய கனிகள் போலச் சிந்திக்கும் சிந்தனையில் இன்பந் தருதல் பற்றி, “தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தமெலாம் இனிக்கும் செழுங் கனியே” என்கின்றார். “நினைவார் நினைய இனியான்” (கானூர்) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. உள்ளத்துள் உள்கி யுருகும் பொழுது, கள்ள நினைவுகள் நீங்க, ஒள்ளிய ஞானமாய்ப் பரம்பொருள் உணர்வு விளங்குதலால். “உள்ளுக்கும் தருணத்தே ஒளி காட்டி” என உரைக்கின்றார். “உருகுவார் உள்ளத்து ஒண்சுடர்” (கோட்டூர்) என ஞானசம்பந்தர் உரைப்பார். உயர்வு - சிறப்புக் குறித்து நின்றது. மண் மீது அடி பொருந்தினாலன்றிச் செம்மலர்ச் சேவடி வருந்துதல் உறாதாதலால், 'மண்ணிற்பொருந்தி' என்பது வருவிக்கப்பட்டது. சேவடி வருந்தினும் அன்பரைக் காண வரும் உள்ளத்தில் உவகை மிக்கிருந்தது என்பது புலப்பட “உவந்து நடந்தருளி” என்கிறார். பல்வகை நினைவுகள் புதையுண்டிருந்தமை பற்றித் தம்மைக் “கள்ள மனத்தேன்” எனப் பழிக்கின்றார். தாம் இருக்கு மிடத்திற்கு முகத்தில் மகிழ்ச்சி தோன்ற அழைத்தமையைக் “களித்தெனை அழைத்து” என்கின்றார். உலகிடை என்பது “நள்ளுலகு” என வந்தது. பிற வுயிர்க்கு நலஞ் செய்தற் பொருட்டே வாழ்க்கை உளதாயிற்று என்பது பட, “நாளும் உயிர்க் கிதம் புரிந்து நடத்தி என உரைத்தாய்” என்கின்றார்.

     இதனால், பிற உயிர்கட்கு நலம் புரிந்து வாழ்க என அறிவுறுத்தமை தெரிவித்தவாறாயிற்று.

     (50)