3110.

     தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
          தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
     பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்
          பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
     தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே
          தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
     என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை
          என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே.

உரை:

     அழகிய அம்பலத்தில் ஆடல் புரியும் தலைவனே, தன் உருவம் இன்னதெனக் காட்டாத மலவிருள் புலரும் காலத்தே தோன்றுகின்ற ஒளி பொருந்திய பொற்றாமரை போன்ற நின் திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்துமாறு பொன்னொளி திகழும் திருமேனி கொண்டு, நடந்தருளி, அடியவனாகிய நான் இருக்குமிடம் எய்தி, கதவினைத் திறக்கச் செய்து, என்னை உன்னருகழைத் தருளி, பொன் போன்ற ஒன்றை என் கையிலே கொடுத்து, இங்கு மகிழ்வுடன் தங்குக என்று உரைத்தருளினாய்! இதனால் என் உருவம் இத்தன்மைத் தென எனக்குணர்த்தி யருளிய நின் திருவருட் பெருமையை என்னென்பேன்! எ.று.

     மலவிருள் எனச் சித்தாந்தம் கூறுவதை “மல இரவு” என வடலூர் வள்ளல் குறிக்கின்றார். தனது உருவம் இத்தன்மைத் தெனக் காட்டாமையின், மல இருளைத் “தன்னுருவங் காட்டாதமல இரவு” என்கின்றார். “ஒரு பொருளுங் காட்டாது இருளுருவங் காட்டும் இருபொருளும் காட்டாது இரவு' (திருவருட். 231) என்று உமாபதி சிவனார் கூறுவது காண்க. பிற பொருள்களைக் காண விடாதாயினும் தனது உருவத்தைக் காட்டுகின்ற பூத இருள் போலாது, தன்னுருவத்தையும் காட்டா தொழிவது மலவிருளின் இயல்பு என்பதாம். மலம் நீங்குதற்குரிய பக்குவம் எய்திய விடத்து ஞானாசிரியனாய்த் தோன்றி இறைவன் ஞான மருளுவன் என நூல்கள் கூறுவது பற்றி, “மல இரவு விடியுந் தருணத்தே” எனவும், “பொன்னுருவத் திருமேனி கொண்டு” வந்தாய் என்றும் உரைக்கின்றார். அவனது திருவருள் ஞாலம் இருந்த வண்ணம் இதுவென விளங்கத் “தன்னுருவம் போன்ற தொன்றங் கெனை யழைத்தென் கரத்தே தந்தருளி” என்றும், அதனால் ஆன்மாவாகிய தனது உண்மை நிலை தமக்கினிது விளங்கிற்றென்பார், “என்னுருவம் எனக்குணர்த்தி” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், ஆன்மாவாகிய தன் உண்மைநிலை யுணர்த்திய திறம் கூறியவாறாம்.

     (51)