3111.

     அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்
          அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந்தருளிக்
     கண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்
          கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
     தொண்டனென எனையும் அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்
          துரையேநின் அருட்பெருமைத் தொன்மையைஎன் என்பேன்
     உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே
          உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.

உரை:

     உண்டு சுவைத்தவர்கள் உண்ணுந் தோறும் வெறுப்பு அடையாமல் மேலும் உண்பதற்கு ஆசை மிகும் தெவிட்டாத அமுது போன்றவனே; உயர்வுடைய அம்பலத்தின்கண் இன்பக் கூத்து ஆடுதலையுடைய பரம்பொருளே, அண்டங்களும் பிண்டங்களும் யாவும் தோன்றி யொடுங்கும் அழகிய மலர் போன்ற சிவந்த திருவடிகள் மண்பொருந்தி வருந்துமாறு பொருள்களை நன்கு கண்டவர்களும் காண முடியாதபடி இருள் திணிந்த இராக் காலத்தில் யான் எண்ணி யிருக்குமிடத்துக்கு நடந்து போந்து தெருவாயிற் கதவைத் திறக்கச் செய்து என்னையும் ஒரு தொண்டனெனக் குறித்து எதிரே வரவழைத்து என் கைகளில் ஒன்றினை யளித்தாயாதலால், தலைவனே, உன்னுடைய அருட் செயலின் பெருமையையும் தொன்மையையும் என்ன வென்று சொல்லுவேன். எ.று.

     சிறிது மிக வுண்ட வழித் தெவிட்டி விலக்கப்படும் இயல்புடைய உலகியற் சுவைப் பொருள் போலாமல் உண்ணுந் தோறும் பேராசையைத் தோற்றுவிக்கும் தெய்வத் தெள்ளமு தென்றற்கு “உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே” எனவும், உயர்வுடைய எல்லாவற்றினும் உயர்ந்ததாகலின், தில்லையம்பலத்தை “உயர் பொது” எனவும் உரைக்கின்றார். பரம்பொருள் - சிவமாகிய பரம்பொருள். மிகு பொருளும் அதிகார முறைமையும் உடையவர் “துரை” எனக் குறிக்கப்படுவர். பெரியதிற் பெரியது அண்ட மென்றும், சிறியதிற் சிறியது பிண்ட மென்றும், வழங்கும். நில வுலகைப் போன்ற பெரும் பொருள் அண்டமாகும். அண்டங்கள் ஒன்றி னொன்று வேறாய் அளவிறந்தனவாதலைக் குறிக்க, “அண்ட வகை” என்றும், அவற்றைப் போலப் பிண்டங்களும் பலவாதல் தோன்றப் “பிண்ட வகை” என்றும் கூறுகின்றார். இவை யாவும் இறைவனால் தோற்றுவித்துப் பின்பு அவனது பரிக்கிரக சத்தியாகிய மாயையின்கண் ஒடுக்கப் படுவதால் “அனைத்தும் உதித்தொடுங்கும் அணிமலர்ச் சேவடி” என ஓதுகின்றார். ஒரு மலர்ச் செடிக்கு, விதையும் நிலமும் போல உலகிற்கு மாயையும் இறைவன் அருட் சேவடியும் இயைந்துள்ளன எனக் கொள்க. கண்டு பயின்றவரும் உருக் காணாதபடித் திணிந்த இருள் நிலவும் நள்ளிரவு எனச் சிறப்பித்தற்குக் “கண்ட வரும் காணாத நடுவிரவு” என்கின்றார். தக்க தென வெண்ணித் தங்குமிடம், “கருதுமிடம்” எனப்படுகிறது. தொண்டுள்ளம் உடையவரே தொண்டராம் தகுதி யுடையராதலின் “தொண்டனென எனையும் அழைத்து” என்றும், என்னையும் பொருளாக மதித்து “என் கையில் ஒன்று அளித்தாய்” என்றும் இயம்புகிறார்.

     இதனால் தம்மையும் தொண்டனாக இறைவன் மதித்தமை தெரிவித்தவாறாம்.

     (52)