3112.

     அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்
          தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்
     பிறவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து
          பெருங்கதவந் திறப்பித்துப் பேயன் எனை அழைத்துச்
     செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும் நான் மறுப்பத்
          திரும்பவும்என் கைதனிலே சேர அளித்தனையே
     பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்
          பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே.

உரை:

     தில்லையிலுள்ள பொற் சபையில் திருக்கூத் தியற்றும் பூரணப் பெரும் பொருளாகிய சிவனே, நல்லறி வுடையவர்களின் மனத்தாமரை மலரும் போது திருவருள் மணம் கமழும் தேனாய் ஊறி விளங்கும் நின் இரண்டாகிய திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்துமாறு கூட்டத்திற் சேராது பிரிந்துறையும் இயல்பினனாகிய யான் இருக்குமிடம் தேடி நடந்து வந்தடைந்து பெரிய கதவைத் திறக்கச் செய்து பேயனாகிய என்னை முன் வருவித்து “அடக்க முடையவனே, இதனை வாங்கிக் கொள்க” என்று கொடுப்பவும் யான் அதனை யேலாமல் மறுக்கவும், திரும்பவும் வற்புறுத்தி என் கையில் ஒன்றை நன்கு தந்தருளினாய்; நல்லூழ் இல்லாதவனாகிய யான் அளப்பரிய திருவருட் பண்பை என்னென்று புகல்வேன். எ.று.

     தில்லை சபை, பொன் வேய்ந்த பெருமை யுடையதாகலின், “பொற் பொது” என்றும், குறைவிலா நிறை வுடைமை பற்றி, “பூரண வான் பொருளே” என்றும் புகழ்கின்றார். அறிவுடையோர், மெய்யுணர்வுடைய மேலோர். மேலோர் அறிவு மலர்தலும் கூம்பலும் இல்லதாயினும், முக்குண வியக்கத்தால் ஓரொரு போது சுருங்குத லுண்மை பற்றி, “அறிவுடையார் உள்ளகப் போது அலருகின்ற தருணத்து” எனக் கூறுகின்றார். அகப்போது - மனத் தாமரை. அலர்தல் - இகழ் விரிதல். அப்பெருமக்களின் மனத்தாமரை சிவமணம் கமழும் திருவருளாகிய தேன் நிறைந்தது என்றற்கு, “அருள் மனத்தேனாகி யுற்ற அடி யிணைகள்” எனச் சிறப்பிக்கின்றார். பிரிவு, எதுகை நோக்கிப் பிறிவாயிற்று. தனித்திருக்கும் இயல்பினராதலின் வடலூர் வள்ளல் “பிறிவுடையேன்” எனத் தம்மைக் குறிக்கின்றார். தலைவாயிற் கதவைப் “பெருங் கதவம்” என்கின்றார். பேயன் - பேய்போல் திரிபவன்; பேய்த் தன்மை யுடையவன் என்றுமாம். ஆற்றலின்மையால் அடங்குவது போலின்றி அறிவால் அறிந்தொடுங்குவது செறிவு என்க. செறிவுடையார் வேண்டாமை மிக வுடையவராதலால், மறுத்தமை விளங்க, “நான் மறுப்ப” எனவும், தக்கது தக்கார் கையுறுவது தகவாம் என்பது பற்றி, இறைவன் வாங்கென வற்புறுத்தினமை புலப்பட, “திரும்பவும் என் கைதனிலே சேர அளித்தனை” எனவும் உரைக்கின்றார். பொறி, நல்லூழ்; நல்லறிவு என்றுமாம். வறியன் - இல்லாதவன். நற்பொறி யின்மையால் மறுத்த குற்ற முடையனாயினேன் என்பதாம். பொறியின்மை பழியின்றாதலால் வற்புறுத்தினமையை நினைந்து வியக்கின்றாராகலின், “அளவினிலுன் கருணையை என்னென்பேன்” என இசைக்கின்றார். அளவினில் என்றவிடத்து இன் சாரியை வேண்டா வழி வந்தது (தொல். எழுத். 132).

     இதனால், செறிவு கண்டு அருளிய திறம் உரைத்தவாறாம்.

     (53)