3113.

     விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய்
          விளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து
     கடையனையுங் குறிக்கொண்டு கருதுமிடத் தடைந்து
          கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க
     இடையின் அது நான்மறுப்ப மறுக்கேல்என் மகனே
          என்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
     உடையபரம் பொருளேஎன் உயிர்த்துணையே பொதுவில்
          உய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே.

உரை:

     எல்லாம் உடைய பரம்பொருளே, என் உயிர்க்கு உயிர்த் துணையாகுபவனே, தில்லையம்பலத்தின்கண் உயிர்கள்யாவும் உய்தி பெறும்பொருட்டு, அருள்நடனம் செய்கின்ற ஒளிமிக்கமாணிக்க மணியாகத் திகழ்பவனே, கண்முதலிய பொறிவாயிலாக விடயங்களைக் காண்பதில்லாத மோன வெளியின்கண் ஒளியாய் விளங்குகின்ற நின்னுடைய சேவடிகள், மண் பொருந்தி வருத்தமுற நடந்து கடையவனாகிய என்னையும் கருத்திற் கொண்டு யான் உறையுமிடத்தை யடைந்து கதவைத் திறக்கச் செய்து என்னுடைய கையில் ஒன்று கொடுத்தாயாக, இடையே தடுத்து நான் அதனை மறுத்த போது, மகனே இதனை மறுக்காதே என்று பின்னரும் வற்புறுத்தித் தந்தருளினாய்; இந்த நின்னுடைய திருவருளை என்னென்று வியப்பேன். எ. று.

     உலகுகள் உயிர்கள் அத்தனையும் தனக்கு முறையே உடைமையும் அடிமையுமாக வுடையவனாதலால் “உடைய பரம்பொருளே” எனவும் உயிர்கள் உய்தி பெறற்கு என்றே தில்லையம்பலத்தில் திருநடனம் நிகழ்கிற தென்ற கருத்து இனிது தோன்ற, “பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே” என்றும் இயம்புகின்றார். ஒளிமணி - ஒளிமிக்க மாணிக்க மணி. கண் காது முதலிய பொறிகளாற் காண்பது கேட்பது முதலிய ஐவகையும் விடயம் எனப்படும். விடயம், விடைய மெனவும் வழங்கும். விடயங்களை நோக்காத மனநிலை மோன நிலையாகும். மோனத்திற் காட்சிப் படுவது திருவருள் ஒளியாதலால், “விடையமொன்றும் காணாத வெளி நடுவே ஒளியாய் விளங்குகின்ற சேவடிகள்” என்று தெரிவிக்கின்றார். இது ஞான மோனத் தவநிலையாகும். “ஞானிகளாயுள்ளார்கள் நான்மறையை முழுதுணர்ந்து ஐம்புலன்கள் செற்று மோனிகளாய் முனிச்செல்வர் தனித் திருந்து தவம் புரியும் முதுகுன்றமே” (முதுகு) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. கடையன், குணம் செயல்களாற் கீழானவன். கருதுமிடம், தக்கதென எண்ணி உறையுமிடம், கொடுத்தலைக் கொள்ளே னென மறுத்தல் நன்னெறி யென்பவாகலின். “இடையில் நான் மறுப்ப” என்கின்றார். கொடுப்போர்க்கும் கொடைப் பொருட்கும் இடையே யுறுவது தடையாகலின், “இடையின்” என எடுத்துரைக்கின்றார். ஏற்பது நலம் பயக்கும் என்பது குறிப்பாதலால் “என்மகனே, மறுக்கேல்” என்று சொல்லுகின்றார். வற்புறுத்தித் தருவது பேரன்புவிளங்க நிகழ்கின்றமையின், “நின் இன்னருள் என்னென்பேன்” என இசைக்கின்றார்.

     இதனால், ஞான மோனத் தவத்தின்கண் திருவடி காட்சிப் படுவது தெரிவித்தவாறாம்.

     (54)