3114.

     நான் தனிக்குந் தருணத்தே தோன்றுகின்ற துணையாய்
          நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய்
     ஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி
          யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
     ஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க்
          கறிவலியேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை
     ஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில்
          இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே.

உரை:

     தில்லையம்பலத்தில் இன்பத் திருக்கூத்தாடும் எனக்கு உயிர்த் தலைவனே, நான் தனித்திருக்கும் காலத்தில் என்கண் காணத்தோன்றும் துணைவனாய், தனித் தில்லாத விடத்தில் எனக்குத் தோன்றாத் துணைவனாய் என்னைக் காத்தருளும் நின்னுடைய திருவடிகள் மண் பொருந்தி வருந்த நடந்துநான் தங்கியிருக்கின்ற இடத்துக்கு வந்து கதவைத் திறக்கச்செய்து, ஆங்கே அமைதியுடன் இருந்த என்னைத் தனக்கு முன்னே வரவழைத்து என் கையில் ஒன்றைக் கொடுத் தருளினாய்; நலம் காணும் அறிவில்லாத யான் நன்றியாக யாதும் செய்வது அறியேனாயினும் நின்னுடைய இனிய கருணைப் பண்பு என்னை இவ்வுலகிற் பெற்றெடுத்த தாய்க்கும் இல்லை என நன்றாக அறிந்து கொண்டேன் எ. று.

     உயிர்கட்கு உயிராயிருந்து உண்மை யுணர்வு நல்கி யாள்வது பற்றி இறைவனை “என்னுயிர் நாயகனே” என்று கூறுகின்றார். தனித்திருக்கும் காலத்தில் துணைவர் உருவிற் போந்து அறிவருளுதலால், “தோன்றுகின்ற துணையாய் என்றும், பிற நண்பர் கூட்டத்திலிருக்கும் போது உள்ளுணர்வாய் வேண்டுவ துணர்த்துதலால், “தோன்றாத்துணையாய்” என்றும் சொல்லுகின்றார். திருவருட் பேற்றுக்குச் சமைந்திருக்கும் நிலைமை விளங்க “ஆன்ற எனை” எனக் குறிக்கின்றார். நல்லதன் நலங்காணும் அறிவு தமக்கு இல்லை யெனத் தம்மை இழித்தற்கு, “அறிவிலியேன்” என்கிறார்.      இதனால், இறைவன் தோன்றியும் தோன்றாமலும் துணை புரியும் திறம் கூறியவாறாம்.

     (55)