3115. அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
பொருள் விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனை அங் கழைத்துத்
தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
சிவபெருமான்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
உரை: மன்னுயிர்கள் மருள் உணர்ச்சி நீங்கி நல்லுணர்வு பெறுமாறு, அழகிய சிற்றம்பலத்தே ஆனந்தத் திருக்கூத்தியற்றும் தலைவனே, அருள் ஞானம் நிலவுகின்ற திருவுள்ளத்தில் அதுவதுவாய்க் காட்சி தருகின்ற அழகிய சிவந்த நின் திருவடி மலர்கள் மண்ணிற் பொருந்தி வருத்தமுற, எப்பொருளும் கண்ணுக்குத் தெரியாத நள்ளிரவில் நானிருக்குமிடம் வந்து, தெருக் கதவினைத் திறக்கச் செய்து, என்னையுன் னருகழைத்து, பொருள் ஒன்றை என் செங்கையில் அளித்தருளினாய்; சிவபெருமானாகிய நினது பெருங் கருணைத் திறத்தினை என்னென்று பேசுவேன். எ.று.
மருளாவது - பொருளல்லவற்றைப் பொருளென்றுணர்வது. மலப்பிணிப்புக் காரணமாக வுளதாய், உயிர்கள் துன்புறுதற் கேதுவாகலின், அதன் நீக்கங் குறித்துத் தில்லையம்பலத்தே திருக்கூத்து நிகழ்வது விளங்க, “மருள் விளங்கி உணர்ச்சியுறத் திருமணி மன்றிடத்தே மன்னுயிருக் கின்பருள வயங்கு நடம்” என்கின்றார். மருட் கண்ணுக்கு விளக்கமின்றி யிருப்பன அருள் நாட்டங் கொண்டு நோக்குமிடத்துத் தெளியப் புலப்படுதல் பற்றி, “மருள் விளங்கி உணர்ச்சியுற” என்று பேசுகின்றார். மருள் நீக்கமும் அருள் விளக்கமும், இருள் நீக்கமும் ஒளி விளக்கமும் போல உடன் நிகழ்ச்சி யென உணர்க. “மலஞ் சாய அமுக்கி அருள்தான் எடுத்து நேயத்தால், ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தான் எந்தையார் பரதந் தான்” (உண்மை. 37) எனத் திருவதிகை மனவாசகங் கடந்தார் உரைப்பது காண்க. திருவருள் ஞானவொளி நிலவும் சான்றோர் உள்ளத்தில் பொருள் வேறு, சிவம் வேறு எனப் பிரித்துணராதவாறு சிவமே ஒன்றித் தோன்றுதலின், “அருள் விளங்கும் உள்ளகத்தே அதுவதுவாய் விளங்கும் அணிமலர்ச் சேவடி” எனச் செப்புகின்றார். இது பற்றியே திருவருள் ஞானமே திருவடி ஞான மெனச் சிவஞானச் செல்வர்கள் தெரிவிக்கின்றனர். இருள் திணிந்த இரவின்கண், எப்பொருளும் புலனாகாமை உலகறிந்த உண்மையாதலின், “பொருள் விளங்கா நடுவிரவில்” எனப் புகல்கின்றார். இன்னதென உணரப் படாதாயினும் ஒரு பொருளுண்மை விளங்க, “தெருள் விளங்கும் ஒருபொருள்” எனத் தெரிவிக்கின்றார்.
இதனால், திருவருள் ஞான முடையார்க்குச் சிவமும் பொருளும் அதுவதுவாய்த் தோன்றும் திறம் தெரிவித்தவாறாம். (56)
|