3116.

     பருவமுறு தருணத்தே சர்க்கரையுந் தேனும்
          பாலுநெய்யும் அறிந்தநறும் பழரசமும் போல
     மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
          வயங்கும் அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
     தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
          செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
     திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான் நின் கருணைத்
          திறத்தினை இச் சிறியேன்நான் செப்புதல் எங்ஙனமே.

உரை:

     அழகிய மணிகள் பதித் தில்லையம்பலத்தின்கண் ஆனந்த நடம் புரியும் தலைவனே, வேட்கை யுளதாய காலத்தில், சர்க்கரையும் தேனும் நெய்யும் இனிமை மிகக் கனிந்த பழச்சாறும் போல, உள்ளமும் உயிரும் உணர்வும் ஒருங்கினிக்க விளங்குகின்ற திருவடிகள் இரண்டும் மண்ணிற் பதிந்து வருந்தத் தெருவில் நடந்தருளி, நானிருக்கும் வீட்டின் கதவினைத் திறக்கச் செய்து பொருளொன்றை என் செங்கையில் அளித்தருளினாய்; சிவபெருமானே, நின் கருணைத் திறத்தினை இச்சிறியேன் எவ்வாறு செப்புவேன். எ.று.

     சிந்திக்கும் அடியார்களில் திருவுள்ளத்தில் செந்தேன் சுரப்பன திருவடிகள் எனப் பெரியோர்கள் கூறுதலால், அதனை நம்மனோர் தெளிய உரைப்பார் போல, “சர்க்கரையும் தேனும் பாலும் நெய்யும் அளிந்த நறும் பழரசமும் போல” என உவமம் செய்கின்றார். இனிய சுவைப் பொருளும் வேண்டாக் காலத்துச் சுவை மாறு படுதலால், சுவை நுகர்ச்சிக்கும் உரிய காலம் வேண்டும் என்பார், “பருவ முறுந் தருணத்தே” என்று விதந்துரைக்கின்றார். திருவடியின்பத்தை யனுபவிக்கும் நலத்தை, “மருவும் உளம், உயிர் உணர்வோ டெல்லாம் தித்திக்க” என வனைந்துரைக்கின்றார். உள்ளமும் உணர்வும் உயிரும் வேறு வேறு பிரிக்கலாகாதபடி கலந்து அனுபவிப்பனவாதலின், “மருவும்” எனச் சிறப்பிக்கின்றார். இன்பமே இத்தன்மைத் தென எடுத்துணர்த்த லாகாதாக, அதனை அனுபவிக்கும் அருட் டிறம் கூறலரிதாகலின், “செப்புதல் எங்ஙனமே” எனச்செப்புகின்றார்.

     இதனால், சிந்திப்பவர் சிந்தனைக்குள் தேனூறநுகருந் திறம் தெறிவித்தவாறாம்.

     (57)