3117. என் அறிவை உண்டருளி என்னுடனே கூடி
என் இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
தன் அறிவாய் எனங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்
தனி நடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
முன்னிறிவில் எனை அழைத்தென் கையில்ஒன்று கொடுத்த
முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
மன் அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப
வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே.
உரை: உயிரிடத்தே நிலைபெற்ற அறிவுக் கறிவாகிப் பொன்னம்பலத்தே இன்பத் திருக்கூத்தியற்றும் பெரிய கருணை மலையே, என் அறிவை விழுங்கி, என்னுயிர்க்கு உயிராகி, யான் நுகரும் இன்பத்தைத் தான் நுகர்வதாக்கி, என்னையும் தானாக்கித் தனிப் பேரறிவாய்த் திகழ்கின்ற நின் பொன்னடிகள் மண்ணிற் பதிந்து வருந்தத் தனியே நடந்து வந்து, தெருக் கதவின் தாழைத் திறக்கச் செய்து எதிரதாக் காக்கும் அறிவில்லாத என்னை யுன்னருகழைத்து, என் கையில் ஒன்றைக் கொடுத்தருளிய முதல்வனே, நின் இனிய அருளை நான் என்னென்று மொழிவேன். எ.று.
அறிவு வடிவாய் அனாதி நித்தமாயுள்ளதாகலின் உயிரிடத் தறிவை “மன்னறிவு” எனக் கூறுகிறார். உயிர்க் குயிராயவனாதலால் சிவ பரம்பொருளை, “அறிவுக் கறிவாம் வடிவாகி” என்றும், அவனது சகள வடிவம் இன்ப மயமாவது விளங்க “இன்ப வடிவாகி” என்றும், தில்லைப் பொன்னம்பலத்தே எழுந்தருளிக் காட்சி தருதல் பற்றி, “பொன்னம்பலத்தே” என்றும் கூறுகின்றார். அறிவின்கண் தங்கி அதன் பசுத்தன்மையைக் கெடுத்துச் சிவகரணமாக்குதலால், “என்னறிவை யுண்டருளி” எனவும், அறிவோடறிவாய்க் கலத்தல் பற்றி, “என்னுடனே கூடி” எனவும், அறிவால் நுகரப்படும் இன்பத்தைச் சிவானந்தமாக்கி உயிரையும் மலம் நீங்கிய சுத்த சிவமாக்குதலால், “என்னின்பம் எனக்கருளி என்னையும் தானாக்கி” எனவும், என்னைத் தானாக்கிய வழியும் தனது தன்மை திரியாது ஒளிருமாறு புலப்பட, “தன்னறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள்” எனவும் எடுத்துரைக்கின்றார். “நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச் சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள் சேர்வார் தாமே தானாகச் செயுமவன்” (கழுமலம்) எனத் திருஞானசம்பந்தர் தெரிவிப்பது காண்க. இது சிவம் நம்மை யாளும் திறமென்பாராய், மணிவாசகர், “சித்த மலம் அறிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்” (அச்சோ) என வுரைப்பது அறிக. தான் பிறவுயிர்கட்குத் துணையாவதன்றித் தனக்கொரு துணை வேண்டாதவனாதல், “தனி நடந்து” வந்தான் என்கிறார். முன்னின் றறிநிலையாதலால் முன்னிலையை “முன்ன்றிவு” எனவும், முன்னைப் பழம் பொருட்கு முன்னவ னென்பது பற்றி, “முன்னவ” எனவும் இசைக்கின்றார்.
இதனால் சிவன் உயிரைத் தானாக்கி யருளும் திறம் தெரிவித்தவாறாம். (58)
|