3118. பரயோகஅனுபவத்தே அகம்புறந்தோன் றாத
பரஞ்சோதி யாகும் இணைப் பாதமலர் வருந்த
வரயோகர் வியப்ப அடி யேன் இருக்கும் இடத்தே
வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது
செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்
உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
உரை: வன்மை மிக்க யோகியர் திருவுள்ளம் போன்ற மணியிழைத்த பொன்னம்பலத்தில் உயிர்கட்கு இன்ப முண்டாதல் வேண்டித் திருக்கூத்தினை ஆடுகின்ற பரம்பொருளே, மேலான சிவயோகானுபவம் பெறுமிடத்து, அகம் எனவும் புற மெனவும் விளங்கித் தோன்றாதவாறு எங்கும் பரந்த பரவொளியாகும் உன்னுடைய திருவடித் தாமரைகள் மண்ணிற் பொருந்தி வருந்தவும், மேலான யோகியர் கண்டு வியக்கவும், அடியவனாகிய யான் இருக்கு மிடத்தை யடைந்து, தெருவாயிற் கதவைத் திறக்கச் செய்து உள்ளே போந்து, நிலைத்த யோக ஞானிகட்கும் பெறலரிதாகிய இதனை வாங்கிக் கொள்க என என்னுடைய செவ்விய கைகளில் ஒன்றினைத்தந்தாயாகலின், உனது திருவருளை என்னென்று சொல்வேன். எ.று.
உரயோகர் - எவ்வாற்றாலும் கலையாத நிலைபெற்ற சிவ யோகியர். அவர்களது திருவுள்ளம் சிவன் விரும்பும் பேரம்பலமாதலின், “உரயோகர் உளம் போல விளங்கும் மணிமன்று” என விளம்புகிறார். கை செய்து அழகுறுத்தப்பட்ட தில்லையம்பலத்தினும், சிவயோகியரின் திருவுள்ளமாகிய அம்பலம் உயர்ந்ததாதலால், அதனை யுவமம் செய்கின்றார். உயிர்கள் பேரின்பம் பெறுவது குறித்தே இறைவனது திருக்கூத்து நிகழ்கிறதென்பதற்கே பன்முறையும் “உயிர்க் கின்பம் தர நடனம்” உளதாயது என வற்புறுத்துகின்றார். பரயோக அனுபவம் - வீடு பேற்றின் பேரின்பத்தையும் விழையாத யோக அனுபவம். “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” (திருக்கூட்) எனச் சேக்கிழார் பெருமான் கூறுவதறிக. இங்கே கூறப்படும் “அகம் புறம் தோன்றாத பரஞ்சோதி” வியோம சோதி என வழங்கும். வரயோகர் - மேன்மை பொருந்திய யோகியர்; உயர்ந்த வரங்களை விழைந்து யோகம் புரிபவர் எனினும் பொருந்தும். யோகத்தாற் பெறலாவதாகிய திருவருளை இறைவன் தானே வலியப் போந்து நல்குவது காண வியப்பு மேலிடுவது பற்றி, “வரயோகர் வியப்ப” என்று கூறுகின்றார். ஓரொரு காலத்தன்றி எக்காலத்தும் யோகானந்தத்தையே விரும்பி யோகக் காட்சியில் உறைபவரைத் “திரயோகர்” என்றும், அவர்க்கும் பெறலரிது என அருமை யுணர்த்த வேண்டி, “திரயோகர்க்கு அரிது இதனை வாங்குக” என்று சொல்லுகின்றார்.
இதனால், பரயோகானுபவத்தின் பண்பும் திரயோகானுபவத்தின் சிறப்பும் உரைத்தவாறாம். (59)
|