3119.

     சொன்னிறைந்த பொருளும் அதன் இலக்கியமும் ஆகித்
          துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து
     கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்
          கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
     என்னிறைந்த ஒருபொருள்என் கையில் அளித் தருளி
          என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்
     தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்
          தளிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.

உரை:

     தில்லையிலுள்ள ஒப்பற்ற அம்பலத்தின்கண் ஆனந்த நடனத்தைப் புரிகின்ற அருளரசே, சொல்லுள் நிறைந்த பொருளும், சொல்லால் அமையும் இலக்கியமுமாய், துரிய நிலையில் நடுநாயகமாய் எழுந்தருளும் நின் திருவடியிரண்டும் மண்ணிற் பொருந்தி, வருந்த நடந்து அச்சம் மிக்க இரவுக் காலத்தில் யான் இருக்கும் வீட்டுக்குப் போந்து, வாயிற் கதவைக் காப்பு நீக்கித் திறக்கச் செய்து கொடு நெறியில் செல்லும், அடியனாகிய என்னை முன்பழைத்து, எனது உணர்வு முழுதும் நிறைந்திருந்த தொருபொருளை என் கையிற் கொடுத்து, “என் மகனே, நீ வாழ்க” என அழகாகச் சொல்லியருளினாய்; நின்னல முழுதும் நிறைந்த நின் கருணையின் தன்மையை என்னென்று சொல்லுவேன். எ.று.

     போந்து கண்டு வணங்குவார்க்கே யன்றிப் போதராது நினைவார்க்கும் ஒத்த இன்பம் அருளுவது பற்றி, அம்பலத் திருக்கூத்தை “ஆனந்தத் தாண்டவம்” என்று சிறப்பிக்கின்றார். சொல்லும் பொருளுமாகிய இரண்டனுள் சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடமாம் என்பது இலக்கண மரபு. இங்கே பொருட்குச் சொல்லையிடமாக்கிச் “சொன்னிறைந்த பொருள்” என்று வள்ளற் பெருமான் உரைக்கின்றார். பொருளாய் உணர்வினும் உரையிலும் உணர்த்த வாராத பரம் பொருளை வழங்கும் சொற்களில் நிறைத்துப் பேச வேண்டி யிருத்தலின் இவ்வாறு உரைக்கின்றாரென அறிக. இலக்கணம் காண்டற்கு இடமாய் சொல்லாலும் பொருளாலும் ஆவதாய் விளங்குவது இலக்கியமாகலின், “இலக்கியமுமாகி” என இசைக்கின்றார். துரிய நடு, கீழாலவத்தையில் அகநாட்டம் கொள்வர்க்கு உந்தி நடுவாகிய துரியத்தில் காட்சிப்படுவதால், “துரிய நடுவிருந்த அடித்துணை” என்கின்றார். என்றாலும், உதயகிரிக்கு அப்பாலுள்ள சூரியனை அக்கிரிக்கண் காண்பது போல, அதீதத்தே இருந்தருளும் திருவடி துரிய நடுவிற் காணப்படுகிற தெனக் கொள்க. கொன் - அச்சம். மண்ணில் உள்ள ஏற்றிழிவுகள் இரவிருளால் மறைக்கப்படுதலின், இரவு அச்சம் பயத்தலின் “கொன்னிறைந்த இரவு” எனக் கூறுகின்றார். வன்மை மிக்க தாழ் என்பதற்குக் “கொழுங் காப்பு” எனக் குறிக்கின்றார். கொடியேன் - நேரிய நெறி மேற் கொள்ளாதவன். யாவரும் காணவுள்ள இடத்தில் உறங்காமல் கோடிய மூலையிற் கிடந்தமையின் தம்மைக் “கொடியேன்” என்று கூறுகிறார். எழில் - அழகு. இனிய மொழிகளைப் பேசுதலால் “எழில் திருவாய்” என்கின்றார்.

     இதனாற் சொற் பொருள் நிலையும் துரியக் காட்சியும் உரைத்தவாறாம்.

     (60)