3120.

     முத்திஒன்று வியத்திஒன்று காண்மின் என்றா கமததின்
          முடிகள் முடித் துரைக்கின்ற அடிகள்மிக வருந்தப்
     பத்திஒன்று இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்
          படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
     சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்
          திறப்பித்தங் கெனை அழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
     சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்
          தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.

உரை:

     ஒப்பற்ற அம்பலத்தின்கண் ஆனந்த நடம் புரிகின்ற அருளரசே, முத்தியொன்று, அதன் உண்மைநிலையொன்று, எனக் காண்பீர்களாக என ஆகமாந்தங்கள் முடிவாக உரைக்கின்ற உன்னுடைய பாதங்கள் இரண்டும் மண்ணிற் பொருந்தி வருந்தப் பத்தியென்பது சிறிதுமில்லாத கடைப்பட்ட புலையொழுக்கத்தையுடைய என் பொருட்டாக, வஞ்ச நினைவுகளையுடைய யான் இருக்குமிடத்தைத் தேடி வந்து, யான் இருந்த மனையின் கதவைத் திறக்கச் செய்து உட்புகுந்து என்னையழைத்துச் சித்திகள் பொருந்திய திருமேனியைக் காட்டி என் செவ்விய கையில் சத்தியுடைய ஒன்றை மகிழ்வுடன் அளித்த உனது திருவருளை என்ன வென்று சொல்லுவேன். எ.று.

     சிவாகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு கூறுகளாகப் பிரித்து சைவப் பொருளை விளக்குவன; இவையொவ்வொன்றையும் பாதம் என்பது மரபு; இவற்றுள் ஞான பாதத்தை சிவாகம முடிபென்றும், ஆகமாந்தம் என்றும் கூறுவர். அதன் பொருள் முத்தி ஞான மென்றும், முத்தி நெறி என்றும் இரண்டாய் இயலுதலால், இரண்டையும் இறைவனுடைய இரண்டு திருவடிகளாக உருவகம் செய்து “ஆகமத்தின் முடிகள் முடித்துரைக்கின்ற அடிகள்” எனவுரைக்கின்றார். இரண்டையும் இன்னவையெனக் குறித்தற்கு, “முத்தி ஒன்று வியத்தியொன்று காண்மின்” என மொழிகின்றார். முத்தி ஞானத்தைத் தடத்த நிலையாகவும் முத்தி நெறியைச் சொரூப நிலையாகவும் சிவாகம ஞான பாதம் தெரிவிக்கிறது. தடத்தம் பிரமாணம் இலக்கணம் என விரண்டாகவும், சொரூபமாகிய வியத்தி சாதனம் பயன் என இரண்டாகவும் பிரித்து ஓதப்படுகின்றன. சிவ பத்திக்கு இவை ஏதுவும் பயனுமாய் இயைவது கொண்டு, இவற்றின் அறிவு சிறிதுமின்றிக் கீழ்மை நிறையுற்றுத் தாழ்ந் தொழித்தேன் என்பாராய், “பத்தியொன்றும் இல்லாத கடைப் புலையேன்” என்று கூறுகின்றார். நிலையிற் “கடைப் புலைய” னானதோடு பொய் வஞ்சனை முதலியன நிறைந்த நினைவு, சொற் செயல்களை யுடையனாயினேன் என்றற்குப் “படிற்றுளத்தேன்” என்று பகர்கின்றார். எல்லாம் வல்ல சித்தராய்த் தோன்றிய பெருமானாதலின், தம்முன் தோன்றி சிவத் திருமேனியை, “சித்தியொன்று திருமேனி” எனச் சிறப்பிக்கின்றார். தம் கையில் தரப்பட்ட தொன்றினால் சிறந்த ஆற்றலொன்று தமக்குண்டான தெனத் தாமே யுணர்கின்றமை விளங்க “சத்தி யொன்று கொடுத்தாய்” என வுரைக்கின்றார்.

     இதன்கண் ஆகமாந்தக் கூறுகள் எடுத்தோதப்பட்டவாறாம்.

     (61)