3121.

     எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே
          இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
     தனக்கு நல்ல வண்ணம்ஒன்று தாடங்கிநடந் தருளித்
          தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
     கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
          களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
     உனக்கினிய வண்ணம் இதென் றுரைத்தருளிச் சென்றாய்
          உடையவதின் அருட்பெருமை உரைக்க முடியாதே.

உரை:

     என்னையடிமையாகவுடைய பெருமானே, நலம் தீங்கு என்ற இரண்டும் ஒத்த நிலையினவாக, உணரப்படுமிடத்து ஒப்பத் தோன்றலால் இரண்டா யமைகின்ற அழகிய திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்தத் தனக்கு நலம் தரும் மேனியொன்று கொண்டு தனியாக ஒரு நாளிரவில் நடந்து, கடைப் புலையனாகிய யான் இருக்குமிடத்தை யடைந்து அதன் கனத்த தெருவாயிற் கதவைத் திறக்கச் செய்து, உவகையுடன் என்னைத் தன் முன்பு வருவித்து எனது கையில் ஒன்று கொடுத்து, உனக்கு ஏற்றது இஃது என உரைத்தருளிச் சென்றாய்; உனது திருவருளின் பெருமையை என்னென்று சொல்வேன். எ.று.

     ஒருவர் ஒன்று கொடுக்கப் பெறுபவர் அன்பால் அவர்க்கு அடிமையாதல் போல இறைவன் திருவருட் பேற்றால் தாம் அவற்கு அடிமையாயினமை புலப்பட, “உடையவ” என வள்ளற் பெருமான் வழங்குகின்றார். நன்மை கண்டு மகிழ்தலும் தீமை கண்டு வருந்துதலும் இன்றி இரண்டும் நுகரத் தகுவன என உணரும் உணர்வு சிவாகமங்களில் இருவினையொப்பு எனப்படும்; “ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமாதலின்றிப் புண்ணிய பாவம் இரண்டினும் அவற்றின் பயன்களிலும் ஒப்ப, உவர்ப்பு நிகழ்ந்து, விடுவோனது அறிவின்கண் அவ்விரு வினையும் அவ்வாறு ஒப்பநிகழ்தலே ஈண்டு இருவினை யொப்பு என்பதற்குப் பொருள் என நுண்ணுணர்வாற் கண்டு கொள்க” (சிவ.பாடியம் : அதி.1) என மாதவச் சிவஞான முனிவர் இரண்டு நூற்றாண்டுகட்கு முன்பே விளக்கி யிருத்தலையறிக. இங்கே ஓரொப்பமதிக்கத் தகுவனவாகிய நன்மை தீமைகள் இரண்டும் திருவடிகளாக உருவகம் செய்தலின், “இரண்டும் ஒத்துத் தோன்றுகின்ற எழிற் பதங்கள்” என வடலூர் வள்ளல் விளக்கம் செய்கின்றார். ஒப்ப என்பது ஒத்தெனத் திரிந்தது. காண்பவர் வெறுத்துப் புறக்கணிக்காத, திருமேனி கொண்டு வந்தமையின், “தனக்கு நல்லவண்ணம் தாங்கி” என்று கூறுகின்றார். நல்ல வண்ணம் - நல்ல அழகிய திருமேனி வண்ணம். ஆகு பெயர். புலையொழுக்கத்தாற் கடையினேன் என்பார் “கடைப் புலையேன்” என்கிறார். களிப்பு - உவகை. உள்மனத்துக்கு ஒத்து இன்பம் தருவது, “உனக்கு இனிய வண்ணம் இது” எனக் கூறப்படுகிறது.

     இதனால், இருவினை யொப்புணர்வு விளக்கப்பட்டவாறாம்.     

     (62)