3122.

     இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்
          எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம்
     எம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம்
          இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச்
     செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
          சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
     உம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன்
          உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.

உரை:

     உயர்ந்த அம்பலத்தின்கண் இன்பத் திருக்கூத் தியற்றும் பரம்பொருளாகிய சிவனே, இம்மை மறுமைகளாகிற இரண்டின் இன்பங்களையும் சிறிதும் விரும்பாத பான்மை யுளதாகும் போது, எக்காலத்தும் நிறைந்துள்ள சிவ சொரூபத்தில் பெறப்படும் சுகாரம்பமும், தன்னின் இயன்ற சுத்த சுகானுபவமும் ஆகிய இரண்டாய்ச் செம்மை நிலையில் விளங்குகின்ற நின் திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்தச் சிறியேன் பால் வந்து என் கையில் ஒன்று கொடுத்தருளினாய்; பெருமானே, இதற்கு நான், முன்னைப் பிறவியில் செய்த தவந் தானும் என்னவோ! எ.று.

     இயற்கை யென்றது ஈண்டுப் பான்மையின் மேலதாகிய இயல்பு குறித்து நின்றது. தசகாரிய நெறியில் தத்துவ சுத்தியும் ஆன்ம சுத்தியும் எய்திய ஆன்மா, சுத்தாவத்தையில் சிவயோக முற்றுச் சிவத்தின் உறுவுண்மை யுணர்ந்து, சிவக்காட்சி பெறுகையில், இன்ப ஒளி தோன்றுதலின் அதனைச் “சுத்த சொரூப சுகாரம்பம்” என்றும், இன்பஞானவொளியிற் கலந்து நுகரும் அனுபவ நிலை, “சுத்த சொரூப சுகானுபவம்” என்றும் ஞான நூல்கள் கூறுதலால், இவை யிரண்டையும் இறைவன் திருவடிகளாக உருவகஞ் செய்து, “செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள்” எனச் செப்புகின்றார். சுத்தம் என்றது சுத்தாவத்தையை. சிவ யோகத்தில் காட்சிப் படும் சுகாரம்பத்தைச் “சுகோதயம்” என்றும், “சுகப்பிரயை” என்றும் சித்தாந்த நூல்கள் கூறுகின்றன. எம்மை ஈண்டுக் காலத்தின் மேற்று. இம்மை, மறுமை, அம்மை நிலை மூன்றிலும் தேய்தலும் வளர்தலுமின்றி, எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாய் இருப்பதாதலால், சிவானந்தத்தை, “எம்மையிலும் நிறை சொருப சுகம்” என இயம்புகின்றார். சிவயோக நிலையில் காணப்படுவதாயும், சிவ போகநிலையில் நுகரப்படுவதாயும் இருப்பதால், “சுகாரம்பம்” எனவும், “சுகானுபவம்” எனவும் விளக்குகிறார். செம்மையேயாய சிவபதங்களாதலின், “செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள்” எனச் சிறப்பிக்கின்றார். உம்மை முன்னைப் பிறப்பு.

     இதனால், சுத்தாவத்தையில் ஆன்ம சுகோதயத்தைக் கண்டு சுகானுபவம் பெறுந்திறம் கூறியவாறாம்.

     (63)