3123.

     அன்பளிப்ப தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
          றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
     என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
          எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
     துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
          தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
     முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
          முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.

உரை:

     முதல்வனே, ஒன்று அன்பு நல்குவ தென்றும், மற்றொன்று இன்பம் நல்குவ தென்றும் அறிஞர்கள் எல்லோரும் போற்றுகின்ற நின் அடியிணை மலர்கள், மண்ணிற் பதிந்து வருந்துமாறு, எலும்பாலாகிய உடல்கள் தோறும் உயிருக்குள் உயிராய் மேவி யுள்ள எம்பெருமானாகிய நீ, நடந்து வந்து கதவினைத் திறக்கச் செய்து, துன்பம் தருகின்ற நெஞ்சுடைய என்னைக் கூப்பிட்டு, உன்னருகழைத்து நின் தூயமுகத்தே இளநகை துளும்புமாறு என்னை நோக்கி, முன்பே எனக்கு நீ தந்தருளிய என் கையில் ஒன்றைக் கொடுத்தருளினாய்; பெருமானே, நின் திருவருளின் பெருமையை நினைக்கவும் இயலாதவனா யுள்ளேன். எ.று.

     முன்னோரில்லா முதல்வனாதலால், “முன்னவ” என்று மொழிகின்றார். மனைவி, மக்கள், பெற்றோர் முதலாயினோர்பால் செய்கின்ற அன்பும், இறைவன்பாற் செய்கின்ற அன்பும் இன்பம் பயப்பனவாயினும், முன்னது நிலையாது கெடுதலும், பின்னது என்றும் நிலைத்து நிற்றலும் இயல்பாக உடையன. அவற்றுள் இறைவன்பாலுளதாகும் அன்பு என்றும் உள்ளதாய், அதன் வழிப் பிறக்கும் இன்பமும் இறவா நிலையதாயிருத்தலின், இரண்டையும் நோக்கி, அறிஞர்கள் இறைவனுடைய அன்பும் இன்பமும் அழியா வளமுடையவாதல் கண்டு, அவற்றை இறைவன் திருவடிக்கு உருவகஞ் செய்தனர் என்பாராய், “அன்பளிப்ப தொன்று பின்னர் இன்பளிப்ப தொன்று என்று அறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள்” என்று போற்றுகின்றார். பொருள் மேல் நிற்கும் அன்பும் இன்பமும் இறவா அன்பும் இறவா இன்பமும் என இவ்விரு திறத்தன என்பது புலப்பட, “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்” (காரைக்கால்) எனச் சேக்கிழார் கூறுவதனாலும் உணரலாம். என்பு - எலும்பு. நெஞ்சளிப்பவை துன்பமும் இன்பமுமாகிய இரண்டுமாயினும் துன்பம் நெடிது நின்று வருத்துதலால், “துன்பளிக்கும் நெஞ்சு” என எடுத்து மொழிகின்றார். இளநகை - புன்னகை. உடல் படைத்த போதே உடன் படைக்கப்பட்டமையின், “முன்பளித்த தென்றெனது கை” என மொழிகின்றார்.

     இதனால், இறைவன் இன்ப அன்பின் திறங் கூறியவாறாம்.

     (64)