3124.

     மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த
          மோனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
     யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி
          உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
     போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து
          புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
     நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்
          நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே

உரை:

     மணியையுடைய பாம்பாகிய ஆபரணம் ஒளி செய்ய அம்பலத்தின்கண் திருக்கூத்தாடுகின்ற நாயகனே, மோகமாகிய இருட் கடலைக்கடந்தற்குத் துணை புரிவதொன்றும், ஞானம் நிறைந்த மோன யோகத் தின்பம் நல்குவதொன்று மெனவுரைக்கப்படும் சிவயோகத் திருவடித் தாமரைகள் மண் பொருந்தி வருந்த நல்லுணர்வில்லாத என் பொருட்டு இருள் மிக்க இரவின்கண் நடந்து போந்து, உலகியற்போக நுகர்ச்சிக்குரிய மனையின் பெரிய வாயிற் கதவைத் திறக்கச் செய்து, உள்ளே புகுந்து புலைத்தன்மையுடைய என்னை முன்பழைத்து என்கையிற் பொருந்த ஒன்றைத் தந்தருளிய நினது அருட் பெருமையை என்னால் எங்ஙனம் புகழ முடியும், காண். எ.று.

     பாம்பின் தலையில் மணியுண்டென்பது நூல் மரபாகலின் சிவன் மார்பிற் கிடக்கும் பாம்பை, “நாகமணிப் பணி” எனச் சிறப்பிக்கின்றார். நாகமணிப் பணியென்பதை மணி நாகப் பணியென மாறுக. உலகியல் வாழ்க்கை மயக்கத்தை “மோக இருட் கடல்” என்று கூறுகிறார். எத்துணைத் துன்பங்கள் தொடர்ந்து தாக்கினும் துறக்க மாட்டாத மன மயக்கத்தைத் தந்து உயிரறிவை அழுத்துதலால் உலகியல் வாழ்வை, “மோக இருட் கடல்” எனக் குறிக்கின்றார். எதிர்காலத்தை மறைப்பாலும் இறந்த காலத்தை மறப்பாலும் தெரியா வகை இருள் செய்தலின், “இருட் கடல்” எனவும். கரையேற விடாது ஆசைப் பெருக்கால் மயக்குதலின் “மோகக் கடல்” எனவும் மொழிகின்றார். எவ்வாறேனும் வாழ்க்கைக் கடலை நீந்துதற்குத் துணை புரிவது ஒரு திருவடி என்று கொள்க. அதன் உண்மைத் தன்மையையுணர்ந்து ஞானிகளாய் மோனமாகிய தவயோகத்தை மேற் கொண்ட பெருமக்கட்கு இன்பம் தந்து ஊக்குவது ஒரு திருவடி யென்பாராய், “நிறைந்த மோன சுகம் அளிப்பிக்கும் துணையொன்று” என்று இயம்புகிறார். இரு திறத்தும் நின்று உயிர்களைச் செலுத்தி ஊக்கும் இறைவன் திருவடிகளை “யோக மலர்த் திருவடிகள்” என்று பரவுகின்றார். யோகம், ஒன்றி யூக்குதல். இல்லிருந்து வாழ்வாரையும், துறவு பூண்டொழுகுவாரையும் அவரவர் நெறியில் நிறுத்தி ஊக்குவன திருவடிகள் என்பதாம். இவ்வுண்மையை யுணராமல் துன்புறுவது பற்றித் தம்மை “உணர்விலியேன்” என இசைக்கின்றார். உணர்விலி - உணர்வில்லாதவன். உணர்விலியேன், உணர்வின்மையை யுடைய யான்; உணர்வில்லாதவனாகிய யான் எனினும் பொருந்தும். இருட்டிரவு - இருணிறைந்த இராப் பொழுது புறத்தே இருந்து உழைத்துப் பொருள் செய்வார் தம் உழைப்பின் பயனை நுகருமிடம் மனை மக்களோடுறையும் இல்லமாதலின் அதனைப் “போக மனை” என்று புகல்கின்றார். மனையின் தெருவாயிற் கதவு ஏனையவற்றிற் பெரிதாதல் பற்றி, “பெருங் கதவம்” என்கின்றார். புலையொழுக்கம் - பொய்யும் வழுவும் பொருந்திய ஒழுக்கம்; அதனாற் “புலையேன்” எனப் புகல்கின்றார். நீ கொடுத்த ஒன்றினால் இரண்டாகிய திருவடிகளின் கருத்தைத் தெரிந்து கொண்டேனாதலால் இதற்குக் கைம்மாறு யாது செய்வேன் என்பாராய், “நின் பெருங் கருணை நவிற்ற முடியாதே” எனக் கூறுகின்றார்.

     இதனால், இறைவனுடைய இரண்டாகிய திருவடிகளின் பொருள் நலம் புகன்றவாறாம்.

     (65)