3125.

     காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
          காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்ப்
     பூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
          பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
     கோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே
          குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு
     மாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்
          மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே.

உரை:

     மணியிழைத்த அம்பலத்தின் கண்ணே இன்பத் திருக்கூத்தையாடுகின்ற அருளரசே, காண்பதற்குரிய கண்கள் காண்பதற்குதவும் பூத வொளியாய், அதுதானும் காட்டுதற் கமைந்த நுண்ணொளியாய் அன்பர்தம் சென்னியிற் சூடிக் கொள்ள நின்ற நின் திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்த அடியேன் இருக்கும் இடத்தை நாடிநடந்து போந்து வாயிற் கதவைத் திறக்கச் செய்து, “மகனே, கோணலுற்றலையும் மனத்தினால் கலக்குண்டு நாணுவதேன்? என் முன் வருக” என அழைத்து அருளுருவாய ஒன்றினை என் கையிற் கொடுத்தாய்; அதனால் மாண்பு மிகுகின்ற உன்னுடைய திருவருளை என்னென்று புகழ்வேன். எ.று.

     முன்னாள் தமிழகத்தையாண்ட வேந்தர்களால் மணிகள் பதித்திழைத்த பொற்சபையாதலால், தில்லையம்பலத்தை “மணிமன்று” என்றும், அதன்கண் நின்று சிவபெருமான் ஆன்மாக்கள் மலப்பிணிப்பின் நீங்கி இன்பமுறும் பொருட்டுத் திருக்கூத்தாடுவதால், “ஆனந்த மாநடம் செய்யரசே” என்றும் ஏத்திப் பராவுகின்றார். காணும் இயல்புடையவாயினும் கண்கள் காண்பதற்குச் சூரிய சந்திரர்களின் பூதவொளியும், அவ்வொளிகள் தாமும் அசேதனமாதலின் காட்டற் றொழிலைச் செய்விக்கும் நுண்ணொளியும் வேண்டப் படுதலின், காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற வொளியாய்க் காட்டுகின்ற ஒளி தனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்ப் “பூணுகின்ற திருவடிகள்” என்று புகன்று மொழிகின்றார். “காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே, காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” (தனித்தாண்) என நாவரசர் நவின்ற பொருளுரையும், “காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்” (சிவ. போ) என மெய்கண்டார் வழங்கிய மெய்யுரையும் ஈண்டு நினைந்துணர்தற் குரியனவாகும். பொருளொருமை விரிக்கிற் பெருகும். மெய்யன்பர்கள் தலையுற வணங்கிச் சூடிக் கொள்வனவாதலின், இறைவன் நற்றாளைப் “பூணுகின்ற திருவடிகள்” எனப் புகழ்கின்றார். திறக்கப் புரிதல் - திறக்கச் செய்தல். கண நேரமும் ஒன்றின்கண் ஒன்றியிராது பல தலையான நினைவுகளையுற்றுப் பன்னெறியில் ஓடுதலால், “கோணுகின்ற மனத்தாலே” என்றும், அதனை அறிஞர் எடுத்துக் காட்டும் போது நாணமுறுவது இயல்பாகலின், “நாணுவதேன்” என்றும் இசைக்கின்றார். மனத்தால் விளையும் இக்குறைக்கு இடமின்றி நேர்பட நிறுத்தி வாழ்க என அறிவுறுத்தினமை இனிது விளங்க, “குறைவற வாழ்க என மகிழ்ந்து ஒன்று எனக்குக் கொடுத்தனை” என வுரைக்கின்றார்.

     இதனால், மனத்தால் விளையும் குறைக்கு இடமின்றி நேர்படவாழ்க என அறிவுறுத்தியவாறாம்.

     (66)