3126.

     ஆறாறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்
          அறிவுக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த
     வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்
          விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்
     பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்
          பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்
     சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்
          சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே.

உரை:

     தில்லையம்பலத்தின்கண் அருட் சோதியாய் விளங்குபவனே, தத்துவங்கள் முப்பத்தாறின் உருவ முதலிய இயல்புகளை அறியச் செய்வது ஒன்றாகவும், அவற்றிற்கு அப்பாலாய்ச் சிறப்புற்ற பரசிவ நிலையனைத்தையும் விளங்கத் தெரிவிப்ப தொன்றாகவும் தத்துவ ஞானப் பயன் கண்டோர் சொல்லுகின்ற செல்வமாகிய திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்த இரவுக் காலத்தில் பேய்த் தன்மை கொண்ட அடியனான யான் இருக்குமிடத்தை நடந்து வந்து என்னை யழைத்துச் சிறந்ததொரு பொருளாக என் கையிலொன்றை யளித்தருளினாய்; உனது திருவருளின் பெருமையை என்னாற் சொல்லுதல் முடியாது, காண். எ.று.

     தில்லையம்பலத்தின்கண் காட்சி தரும் கூத்தப் பெருமான் திருவுருவம் சிந்திப்பார் சிந்தையில் அரும்பெரும் ஞானவொளிப் பொருளாய்த் திகழ்வது பற்றி, “பொதுவிற் சோதி” எனப் புகன்றுரைக்கின்றார். சேக்கிழாரும் அதனை, “ஆதியாய் நடுவுமாகி அளவிலா வளவுமாகிச் சோதியாய் உணர்வு” (தில்லைவாழ்) மாவது என்று சொல்லுவதறிக. “சுடர் விட்டுளன் எங்கள் சோதி” (பாசுரம்) எனத் திருஞானசம்பந்தரும் கூறுவர். தத்துவம் முப்பத்தாறு - ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என வகையால் மூன்றாகி ஒவ்வொன்றும் முறையே இருபத்து நான்கும் ஏழும் ஐந்துமாய் விரியும். தத்துவ ரூபம் - தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி; ஆன்ம ரூபம் - ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி; சிவ ரூபம் - சிவ தரிசனம், சிவ யோகம், சிவ போகம் எனப் பத்தாதலின், “சொருப முதல் அனைத்தும்” என்று இயம்புகின்றார். சிவ தத்துவங்கட்கு அப்பால் விளங்குவது பராகாசப் பரவெளியில் தோன்றும் பரசிவமாதலின், “அப்பாலே யிருந்த வீறாய தற்சொருப முதல் அனைத்தும்” என்று கூறுகிறார். இங்கே “அனைத்தும்” என்பது, மாயப் பாழ், வியோமம் பாழ், உபசாந்தப் பாழ் எனத் திருமூலர் கூறுவனவற்றைக் குறிக்கின்றது. தத்துவ அறிவும் பாழறிவும் திருவடி ஞானத்தால் உணகப்படுதலின், இரண்டையும் இறைவன் திருவடிகளாக உருவகம் செய்தலால், “விளைவறிந்தோர் விளம்பும் பேறாய திருவடிகள்” என வுரைக்கின்றார். தத்துவ ஞானப் பயன் கண்ட பெரியோர் இதனை விளங்க வுரைக்கின்றமையின், அவர்களை “விளைவறிந்தோர்” எனச் சிறப்பிக்கின்றார். சிவ வழிபாட்டாற் பெறப்படுவனவாதலால், “பேறாய திருவடிகள்” என்று கூறுகின்றார். அலைகின்ற மனமுடைமை பற்றித் தம்மைப் “பேயடியேன்” என்று சொல்லுகின்றார். பேயடியேன் - பேய்த்தன்மையாற் கீழாயவன்.

     இதனால், தத்துவ ஞானம் உண்மை ஞான மிரண்டும் திருவடி ஞானமென அறிவுறுத்தவாறாம்.

     (67)