3127. கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்
காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்
ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்
றுபயம்எனப் பெரியசொலும் அபயபதம் வருந்தத்
துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து
துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து
வெளிவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்
வித்தகநின் திருவருளை வியக்கமுடி யாதே.
உரை: ஞான மூர்த்தியே, அறிகருவி செயற்கருவி கரணங்களாகியவற்றை உடன் கலந்திருந்து இயங்க இயக்கி யுதவுவ தொன்றும், அவற்றினின்றும் ஆன்மாவை நீக்கித் தனித்து நிற்கச் செய்வ தொன்றுமென இரண்டாம் எனப் பெரியோர்கள் சொல்லும் எவ்வுயிர்க்கும் புகலிடமாகும் திருவடிகள் இரண்டும் மண்ணிற் பொருந்தி நடந்து வருந்த, இருக்குமிடம் நாடி அடியேன் இருக்குமிடத்துக்கு இரவுப் போதில் அடைந்து என் தன்மை கண்டு துணிந்து என்னுடைய கையில் யான் இனிது கண்டறியத் தந்து, “அஞ்சாதே இன்று முதல் மிகவும் மகிழ்வுடம் இருப்பாயாக” என்று உரைத்தருளினாய்; உனது திருவருளை வியந்து போற்றுவது இயலாத தொன்று. எ.று.
கருவிகளென்பவை கண் முதலிய அறிகருவி யைந்தும், வாய் முதலிய செயற் கருவி யைந்தும், மன முதலிய நான்குமாம். அறிகருவிகளை ஞானேந்திரிய மென்றும், செயற்கருவிகளைக் கன்மேந்திரிய மென்றும், மன முதலிய நான்கையும் கரணம் என்றும் வழங்குவர். கண் முதலிய கருவிகளோடு கலந்துடனின்று காண்பது முதலாயின செய்வதும், வாய் முதலியவற்றோடு கலந்து பேசுவது முதலாயின செய்வதும், மன முதலியவற்றுடன் கலந்து நினைப்பது முதலாயின செய்வதும், ஒரு திருவடி என்றும், இக்கருவி கரணங்களின்றும் வேறு பிரிந்து உயிரைத் தனித்து நிற்கச் செய்வது ஒரு திருவடி என்றும் உரைப்பாராய், “கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக் காட்டுவது ஒன்று; அக்கருவி கரணங்களனைத்தும் ஒருவி அப்பாற் படுத்தி நம்மை ஒரு தனி யாக்குவதொன்று” என மொழிகின்றார். இதனை யுணர்ந்த பெரியோர் இவ்விரண்டு அருட் செயலும் இறைவன் திருவடி இரண்டுமாம் எனக் கூறுகின்றனர் என்பாராய், “உபயமெனப் பெரியர் சொலும் அபய பதம்” என அறிவுறுத்துகின்றார். உபயம் - இரண்டு. அபயம் - புகலிடம். துருவுதல் - தேடுதல். தருவதைப் பயன் கொள்ளானோ கொள்வானோ என எண்ணிப் பயன் கொள்வன் என்று தெளிந்து கொண்டமை விளங்கத் “துணிந்து” என்றும், கொடுப்பவரும் ஏற்பவரும் கொடைப் பொருளும் இனிதறியத் தந்த செய்கையைச் “சோதியுறக் கொடுத்து” என்றும் இயம்புகிறார். வெருவுதல், அஞ்சுதல், கொடுப்பக் கொண்டு மருண்டு நோக்கினமையின் - “வெருவியிடேல்” எனத் தெளிவிக்கின்றார்.
இதனால், கருவி கரணங்களோடு கலந்தும் தனித்தும் ஆன்மா உடற்குள் இயங்கும் திறம் கூறியவாறாம். (68)
|