3128.

     ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்
          கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
     சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று
          சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
     வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி
          விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்றும் கொடுத்தாய்
     பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்
          பண்பைஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே.

உரை:

     அனாதி மலக் கலப்பு நீங்கும் பொருட்டு ஆன்ம சுத்தி தந்தும் அவ்விடத்தே ஆன்மாவும் தானும் அதுவாதல் ஒன்றும், அவ்வாறு அதுவதுவாக்கும் அருளொளி தானாகி நிற்கும் தனி நிலை யொன்றுமாகச் சிவாத்துவித நிலையை யுணர்ந்தோர் உரைக்கும் இரண்டாகிய திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்த வீதியிலே நான் இருக்குமிடந் தேடி நடந்து விருப்புடன் என் மனையை யடைந்து என் பெயரைக் கூவி முன்பு வரவழைத்து நன்மை யுண்டாக ஒன்றினை என் கையில் உவப்புடன் தந்தருளினாய்; உமையொரு பாதியும் தானொரு பாதியுமாய்க் கூடி ஒன்றாகிய பசுபதியான நினது கருணை நலத்தை அறிந்தது கொண்டு நின்பாற் பெயராத பெரு நட்புக் கொள்வேனாயினேன். எ. று.

     அனாதி மலப்பிணிப்பிலே ஆன்மா இருந்தே யொழியாமல் ஒரு கால் நீங்கிச் சுத்தி பெற்றுச் சிவமாமாறு செய்வதொரு திருவடி என்பாராய், “ஆதியிலே கலப்பு ஒழிய ஆன்ம சித்தி அளித்து ஆங்கி அதுவாக்குவதொன்றாம்” என வுரைக்கின்றார். கேவலத்தில் அனாதி மலப்பிணிப்பிலே செயலற்றுக் கிடக்கும் ஆன்மாவுக்குத் தனது பேரருளால் தனுகரண முதலியவற்றை யளித்து மெய்யுணர்வுற்று ஆன்ம சுத்தி பெறச் செய்ததுடன் அந்நிலையிற் சிவமாம் தன்மை யுற வருளுவது சிவத்தின் திருவருட் பெருஞ் செயலாதலின் இவ்வாறு கூறுகின்றார். ஆன்ம சுத்தி என்பது, “இவன் தன் தன்மை கெட்டுப் பொருளிற் போய் அங்குத் தோன்றா தாயிடின் ஆன்ம சுத்தி” (உண். நெறி. விளக்) என உமாபதி சிவனார் உரைப்பது காண்க. இங்கே தன்மை கெடுதலாவது பசுவாம் தன்மை நீங்குவ தென அறிக. ஆன்மா சிவமாவது அதுவதுவாதல். இது சிவயோகம் என்பர். “தன்னைக் கண்ட என் வண்ணம் எவ் வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்” (பொன்வண்) என்பர் சேரமான் பெருமாள். தனது சிவத் திருவருட் சோதியில் தன்னில் தோய்ந்த இரும்பைத் தானாக்கும் நெருப்பைப் போல் சிவமாக்கும் செயலை “அது வதுவாய் ஆக்கும் சோதியிலே தானாகிச் சூழ்வது ஒன்றாம்” எனக் கூறுகிறார். தன்னைச் சார்ந்த ஆன்மாவைத் தானாக்கிய போதும் தான் விகாரமின்றித் தானேயாய் நிற்கும் திறம் விளங்க, “ஆக்கும் சோதியிலே தானாகிச் சூழ்வது” என்று இயம்புகின்றார். சூழ்ச்சி- அத்துவிதக் கலப்பு. இதன் விளக்கங்களை மோட்ச காரிகை முதலிய நூல்களிற் காண்க. துணையடிகள்- இரண்டாகிய திருவடிகள். ஆகவே, சிவமாக்குவ தொன்று, சிவமாய் நிற்ற லொன்று; இரு திறமும் இரண்டு திருவடிகளாக உருவகம் செய்யப்பட்டமை காண்க. தேடிக் காண்டலில் விருப்பறாமை விளங்க, “விரும்பி யடைந்து” எனவும், பயன் தரு தொன்று என்றற்கு “விளை வொன்று” எனவும் கூறுகின்றார்.

     இதனால், ஆன்ம லாபம் விளைவிக்கும் சிவத்தின் அருட் பண்புணர்த்தியவாறாம்.

     (69)