3129.

     இருட்டயா மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்
          எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே
     பொருட்டாயா போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்
          பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து
     மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து
          வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்
     அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்
          ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே.

உரை:

     தில்லையம்பலத்தின்கண் இன்பத் திருக் கூத்தாடி யருள்கின்ற அருளரசே, மலப்பிணிப்பால் உளதாகின்ற இருள் நிறைந்த கேவலத்தில் இருக்கின்ற உயிர்களாகிய நம்மை யெல்லாம் சகலத்திற் செலுத்துவ தொன்றாகவும், சுத்த மெய்துவித்து இன்ப நிலையிற் செலுத்துவ தொன்றாகவும், சிவ ஞானப் பொருளாகிய தாயர் போற்றிப் புகழ்கின்ற அழகிய திருவடிகள் இரண்டும் மண்ணிற் பொருந்தி வருந்த இருள் மிக்க இரவில் யான் இருக்கும் இடம் தேடி நடந்து மனைக்குட் புகுந்து மயங்குகின்ற உலகியல் வாழ்க்கைச் சூழலிற் கிடந்த என்னைக் கூவி யழைத்து அழகிய தொன்றை என் கையில் மகிழ்ச்சியுடன் தந்தருளினாய்; நினது அருள் நிறைந்த பெருமைகளை என்ன வென்று சொல்லுவேன். எ.று.

     கேவலம், சகலம், சுத்தம் ஆன்மாவின் நிலை மூன்றனுள் மலம் ஒன்றே கொண்டு அதனாற் பிணிப்புண்டு அது செய்யும் இருளிற் கிடக்கும் கேவலத்தை “இருட்டாய மலச் சிறை” என இயம்புகின்றார். அதனினின்றும் நீங்கி உடல் கருவி கரணங்களோடு கூடி யுலகில் வாழ்க்கை யுறுவது சகலம்; இரண்டின் நீங்கியது சுத்த நிலை யென்னும் பேரின்ப வாழ்வு. கேவலத்தினின்றும் ஆன்மாவை நீக்கிச் சகலத்தில் உய்த்துச் சுத்த நிலையடைய முயலும்வண்ணம் திருவருள் உதவுதலை, “மலச் சிறையில் இருக்கும் நமையெல்லாம் எடுப்ப தொன்றாம்” எனவும், இன்ப நிலை கொடுப்ப தொன்றாம் அனவும் உரைக்கின்றார். சிவ ஞான நூற்பொருளை யறிந்துடையவர் உணர்ந்து சிவத்தின் திருவருளாகிய திருவடிகளைப் போற்றிப் பராவுகின்றார்களாகையால், “பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள்” என்று புகழ்கின்றார். திருவருள் ஞானமே பொருளாகக் கொண்டவர்களாதலால், சிவ ஞானிகளைப் “பொருள் தயார்” என உருவகம் செய்கின்றார். இராப் பொழுது இருளைக் கனத்த பொருளாக் கொள்ளுதலால், “பொறை யிரவு” எனப் புகல்கின்றார். உலகியல் நினைவுகளாற் சூழப்பட்டுக் கிடத்தல் விளங்க, அவற்றைத் தோழர் கூட்டமாக வருவகித்து, “மருட்டு ஆயத்திருந்தேன்” என வுரைக்கின்றார். மருட்டுதல் - மருளச் செய்தல். வண்ணம் - அழகு; ஈண்டு ஆகுபெயராய்ப் பொருள் மேலதாயிற்று. அருள் தாயப் பெருமை, அருளொளி பரந்த பெருமை, தாய பெருமை எனற்பாலது எதுகை நோக்கி வலித்தது.

     இதனால், ஆன்ம வுய்தி குறித்துத் திருவருள் உதவும் திறம் கூறியவாறாம்:

     (70)