3130.

     உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
          உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
     சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
          சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
     பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
          பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
     நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
          நிறைந்த இன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.

உரை:

     நின்மலப் பெருமானே, தில்லையம்பலத்தின்கண் திருக்கூத்தியற்றும் தலைவனே உம்மனா சத்தியின் உள்ளே யொளிரும் ஒளியாகவும், அதன் புறத்தே யுள்ள சத்திகளின் வெளியே ஒளிரும் ஒளியாகவும் இரண்டாய் ஞானமயமாய் விளங்குகின்ற திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருத்தமுறச்சிறியவனாகிய என் பொருட்டுத் தெருவில் நடந்து, பொன் மயமான திருமேனி இனிது விளங்க, என்னிடம் போந்து, அரிய பொருளொன்றை என் கையில் நன்கு பொருந்தக் கொடுத்தருளினாய்; நின்னுடைய பேரருளை என்னென்று புகல்வேன். எ.று.

     நிர்மலன் நின்மலனென்று தமிழில் வழங்கும்; மலமே யில்லாதவன் என்பது இதன் பொருளாகும். மலமுடையவாதலும் இல்லாமல் நீங்குவதும் உயிர்கட்கே யன்றி இறைவற்கு இல்லையாதலால், “நின்மலனே” எனக் கூறுகின்றார். குறைதலும் நிறைதலும் உலகியல் இன்பங்களின் இயல்பு; இறையருள் இன்பம், குறைவிலா நிறைவாதலின், “நிறைந்த இன்ப வடிவாகி” என்று உரைக்கின்றார். உன்மனி உன்மனா சத்தி; இஃது உன்மனை யெனவும் சிவாகமங்களில் வழங்கும். துவாத சகலைப் பிராசாத யோகத்தில் முதன்மை யுற்று விளங்குவது உன்மனி; இதற்கு இடம் விந்து தத்துவம் செய்கைக்குரிய இதன்கண் உள்ளே சிவவொளி திகழ்வதால், “உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன்றாகி” என இயம்புகின்றார். “உன்மனிக்குள் ஒளிர் பரஞ்சோதியாம்” (பொன்னை) எனத் தாயுமானவர் கூறுவது காண்க. அதன் பிறத்தே யுள்ள சமனை, வியாபினி முதலிய கலைகளிலும் அவ்வொளி பரந்து விளங்குவதால் “உற்றவதன் வெளிப் புறத்தே ஓங்குவதொன்றாகி” எனக் கூறுகின்றார். சித்து - ஞானம். சித் மயம் - சின்மயமாயிற்று; சத்மார்க்கம், சன்மார்க்க மாவது போல. சிவம் ஞான மயமாதலால் அதன் திருவடிகளைச் “சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள்” எனத் தெரிவிக்கின்றார். தமது எளிமையைப் புலப்படுத்தற்குச் “சிறு நாயேன்” எனக் கூறுகிறார். வள்ளலார் முன் போந்தபெரியவர் திருமேனி, இரவில் விளக்கொளியில் பொன்னிறத்தோடு பொலிந்தமை புலப்பட, “பொன் மயமாம் திருமேனி விளங்க” என்று புகல்கின்றார். தவறி வீழ்ந்து மறையாதவாறு கொடுத்தது தோன்றப் “பொருந்த அளித்தனை” என்றும், அப்போது அவர் முகத்தில் விளங்கிய அன்பு சிறந்து தோன்றினமையின், “நின்னருளை என் புகல்வேன்” என்றும் இயம்புகின்றார். நிருத்தம் - நடனம்.

     இதனால், துவாத சகலாப் பிராசாதயோகத்தில் உன்மனா கலையின் உள்ளும் புறமும் மிளிரும் சிவவொளியின் சிறப்புணர்த்தியவாறாம்.

     (71)