3131.

     ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்
          அத்தொழிகா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம்
     தெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந்
          திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து
     கைவரயான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்
          களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
     சைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும்
          தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே.

உரை:

     சிவ சம்பந்தமுடைய அழகிய அம்பலத்தின்கண் ஒப்பற்ற நடம் புரிகின்ற தற்பரனே, பிரமன் முதலிய ஐவருக்கும் முறையே படைத்தல் முதலிய தொழிலைந்தும் தருவது ஒன்றாகவும், அத்தொழில்கட்கு வேண்டும் நிமித்த காரணத்தை விரும்பி யளிப்பதொன்றாகவும் அமைந்து, இது தெய்வ நெறி யென்று எனச் சிவநெறிச் செல்வர்கள் மிகவும் புகழ்ந்து போற்றும் திருவடிகள் இரண்டும் மண் பொருந்தி மிகவும் வருந்தத் தெருவின்கண் நடந்து, யான் இருக்கும் மனையின் கதவைத் திறக்கச் செய்து மகிழ்வுடன் என்னை யழைத்து, யான் நினைத்தது கைகூடும்படி என் கைகளில் திருவரு ளொன்றினை நல்கினார்; அதற்கேதுவாகிய திருவருட் பெருமையை என்னென்று சொல்வேன். எ.று.

     சைவ மன்று - சிவ சம்பந்தமுடைய தில்லையம்பலம். சிவசம்பந்தம், சைவமாகும். “சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல்” (1512) என்பர் திருமூலர். தற்பரன் - தானே தனக்குப் பரமாகியவன். ஐவர் - பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன்; இவர்கள் முறையே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களையும் செய்பவர். இத் தொழிற் காரண சத்திகள் முறையே வாணி, திரு, உமை மகேசை, மனோன்மணி. பரசிவம் இவர்கட்கு இவ்வகைத் தொழிலைத் தருவதும், அதற்கு வேண்டும் காரண சத்திகளையும் நல்குவதால் “ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்; அத்தொழிற் காரணம் புரிந்து களித்திடுவ தொன்றாம்” என்று கூறுகின்றார். இது தெய்வங்களால் கூறப்படும் சிறப்புப் பற்றிச் சிவஞானச் செல்வர்கள் “தெய்வ நெறி என்று அறிஞர் புகழ்ந்து புகழ்ந்து ஏத்துவர்” என இயம்புகிறார். அடுக்கு மிகுதி குறித்து வந்தது. “கைவரக் கொடுத்தாய்” என இயையும்.

     இதனால், தெய்வ நெறிப் பற்றிப் படைத்தல் முதலிய தொழில் நிகழும் திறம் கூறியவாறாம்.

     (72)