3132.

     அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
          ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
     இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
          யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
     மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
          மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
     தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
          சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே.

உரை:

     தெளிந்த ஞானம் விளங்கும் தில்லையிலுள்ள அழகிய அம்பலத்தின்கண் திருக் கூத்தியற்றும் அருளரசே, சிவபெருமானே, நின்னுடைய திருவருள் தோன்றும் காலத்தே அமிழ்த வடிவாகவும், அனுபவிக்குமிடத்தே ஆனந்த மயமாகவும் அமைந்துள்ள நின் திருவடிகள் இருள் பரவும் இராக் காலத்தில் மண் பொருந்தி வருந்த நடந்து வந்து, யான் இருக்கும் வீட்டின் கதவைத் திறக்கச் செய்து உள்ளே போந்து, உறக்கத்தால் மருண்ட மனமுடையவனாகிய என்னைத் தன் முன்பு வரவழைத்து முகநோக்கி மனமகிழ்ந்து எனது கையில் ஒன்று கொடுத்தருளினாய்; சற்குருவே, நின் கருணைத் திறத்தை என்னென்றுவியப்பேன். எ.று.

     தெருள் - தெளிவு; ஈண்டுத் தெளிந்த ஞானத்தின் மேற்று. அம்பலக் காட்சி அறிவின்கண் தெளிவு தருமென்பது கருத்து. அருள் - திருவருள் ஞானம். ஞர்னம் அமுதமாகவும், ஞானானுபவம் ஆனந்தமாகவும் விளங்குதலை யுணர்த்துதற்கு, “அருளுதிக்கும் தருணத்தே அமுத வடிவாகி ஆனந்த மயமாகி அமர்ந்த திருவடிகள்” எனத் தெரிவிக்கின்றார். உறக்கத்தால் மனத்தின்கண் மயக்க முண்டாதல் இயல்பாதலின், “மருள் உதிக்கும் மனத்தேன்” என வுரைக்கின்றார். சற்குரு - மெய்ம்மை கூறும் ஆசிரியன். உறங்கும் போது வலியப் போந்து எழுப்பித் தன்பால் அழைத்துத் தகுவன சொல்லித் தருவது பேரருளுடைய பெருமக்கட்கமைவதாகலின், “நின் கருணைத் திறத்தை வியக்கேன்” என விளம்புகின்றார். வியக்கேன் - வியந்து புகழும் திறமுடைய னல்லேன் என்பதுபட நிற்கின்றது.

     இதனால், திருவருட் பேற்றின் இயல்பும் அனுபவமும் கூறியவாறாம்.

     (73)