3133.

     நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
          நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
     தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்
          தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
     தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்
          தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
     வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்
          மன்றில்நடந் தரசேநின் மாகருணை வியப்பே.

உரை:

     அம்பலத்தாடும் ஆனந்தக் கூத்தனே, நான் முதலில் கண்ட போது, தன்னியல்பாய சோதியாகி, நான் பற்றிக் கொண்ட போது தேனையுடைய தாமரையின் தன்மை யுடையதாகி, நான் சிந்திக்கும் போது தேனிற் கலந்தபால் போலத் தித்திப்பதாகி, அன்றொரு நாள் என் சென்னியின் மேல் வைத்த போது உடலும் உயிரும் ஒருங்கே குளிரப் பண்ணிய நின் திருவடி மலர்கள் இரண்டும் மண்ணிற் பதித்து வருந்துமாறு பெருமையுடன் நடந்து வந்து எனக்கும் ஒன்று நல்கியருளினாய்; பெருமானே, நின் பெருங் கருணைத் திறம் எனக்குப் பெருவியப்பைத் தருகின்றன. எ.று.

     மதி நளினம் - தேனையுடைய தாமரை. மது - தேன்; மதுவை யுடையது மதி, காட்சிக்கு ஒளி மயமாய், கையால் தீண்டுதற்குத் தாமரையாய், சிந்தைக்குத் தேன் கலந்த பாலாய்த் திருவடிகள் தோன்றத் தாம் அனுபவித்த நலத்தை இங்கே எடுத்துரைக்கின்றார். திருவடி சென்னியிற் பட்டதாகத் தமிமல் தாமே உணர்ந்த உணர்ச்சியை, “சென்னி மிசை மகிழ்ந்து தான் கொண்டு வைத்த அந்நாள் சில்லென்றென் உடம்பும் தகவுயிரும் குளிர்வித்த தாள் மலர்கள்” என்கின்றார். உடம்பிற் கண்ட குளிர்ப்பை உணர்வு வாயிலாக உயிர் உணர்ந்ததன் வேதனைக் காட்சியை, “சில்லென்றென் உடம்பும் உயிரும் குளிர்வித்த” என வோதுகின்றார். “அருந்தின்பத் துன்ப முள்ளத் தறிவினுக்காக மாதி தருந் தன் வேதனையாங் காட்சி” (சிவ. சித்தி. அளவை) என அருணந்தி சிவனார் கூறுவது காண்க. அருள் புரிய வந்த பெரியவரின் பெருமித நடையைப் புலப்படுத்தற்கு, “வான் கொண்டு நடந்து” என்று குறிக்கின்றார்.

     இதனால், திருவடி ஞான அனுபவம் கூறியவாறாம்.

     (74)