3134. யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே
உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்
ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த
என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து
வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங்கென்னை
வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்
மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்
முயங்கிநடம் புரிகின்ற முக்கணுடை அரசே.
உரை: மயக்கமாகிய இருளைப் போக்கிய பெருமக்கள் போற்றுமாறு அம்பலத்தில் நின்று திருக்கூத் தியற்றுகின்ற முக்கண் மூர்த்தியாகிய தலைவனே, யோக முடிவில் இருப்பது ஒன்று எனவும், கலையின் முடிவாகிய அதீதையில் மகிழ்வுடன் இருப்பது ஒன்று எனவும், மெய்யுணர்வுடையோர் தம் உணர்வால் தனித்திருந்து உணரவல்ல நின் அடியினை மலர்கள், மண்ணிற் பதிந்து வருந்த என் பொருட்டாய், நான் இருக்குமிடந் தேடி வந்து, வாகாக அமைத்த தச்சு வேலைப்பாட்டால் அழகுற்ற கதவினைத் திறக்கச் செய்து, என்னை யுன்னருகழைத்து என் கையிலே மகிழ்வோடு ஒன்று கொடுத்தருளினாய்; பெருமானே, உன் அருட்டிறத்தை என்னென்பேன்! எ.று.
மோகாந்த காரம்-மோகமாகிய இருள். மோகத்தை மயக்க மென்றும் கூறுவர். முயங்குதல் - பொருந்துதல்; கூடுதலுமாம். யோகாந்தம்-யோகக் காட்சியின் முடிவு. நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி என்ற கலைகட்கு அப்பாற்பட்ட அதீத கலையின் முடிவுநிலை, “கலாந்தம்” எனப்படுகிறது. அதனைச் சாந்தியதீதை என்பது பெருவழக்கு. இவ்வீறந்தங்களின் முடிவாய் விளங்குவன இறைவனுடைய இரண்டாகிய திருவடிகள் என்றற்கு, “யோகாந்த மிசை இருப்ப தொன்று; கலாந்தத்தே உவந்திருப்பது ஒன்று என இரண்டாம் இணையடிகள்” என்று இசைக்கின்றார். இவை தாமும், மெய்யுணர்வுடைய சிவஞானிகள் தனித்திருந்து அகத்தே காணத் தோன்றுவன என விளக்குதற்கு, “மெய்யுணர்வுடையோர் உணர்வால் ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள்” என இயம்புகின்றார். வாகு - திறமை. தச்சுத் தொழிற் றிறத்தால் அழகுறுத்தப்பட்ட கதவு என்றற்கு, “தச்சுணிக் கதவம்” எனச் சிறப்பிக்கின்றார்.
இதனால், யோகாந்தம், கலாந்தமாகிய இரண்டிடத்தும் இறைவன் திருவடிகள் விளங்கிச் சிவ ஞானிகளின் ஏகாந்தக் காட்சிக்குப் புலனாவன எனத் தெரிவித்தவாறாம். (75)
|