3135. மகமதிக்கு மறையும்மறை யாம்மதிக்கும் அயனும்
மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்
மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்
தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே.
உரை: தில்லையம்பலத்தின்கண் ஆடல் புரிகின்ற பெருமானே வேத வேள்விகளால் நன்கு மதிக்கப்படும் வேதங்களும், வேதங்களால் போற்றப்படும் பிரமனும் பிரமனால் பெரிதும் மதிக்கப்படுகின்ற திருமாலும், திருமாலால் மிகவும் மதிக்கப்படும் உருத்திரனும், அவ்வுருத்திரனுக்கு மேலாகிய மகேசனும், அவன் மதித்துப் பாராட்ட விளங்கும் சதாசிவனும், தத்தம் மனத்தால் உயர்த்திப் பராவுந் தோறும் அவர்களின் மனத்திலும் தலையிலும் மறைந்து தங்குகின்ற திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்த எனது வீடு உயர்வு பெறுமாறு நடந்து வந்து என் முன்னிருந்து எனக்கொன்று கொடுத் தருளினாய்; வியப்பு நல்கும் உனது திருவருளை என்னென்று புகழ்வேன். எ. று.
வேள்விகட்கு வேதமும் வேதங்கட்கு வேதியனான பிரமனும் இன்றியமையாச் சிறப்புடையவர்கள் என்றற்கு, “மறை மதிக்கும் மறையும் மறையான் மதிக்கும் அயனும்” என வுரைக்கின்றார். பிரமனால் வணங்கப்படும் பெருமை யுடையவன் திருமாலாதல் விளங்க, “மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமால்” எனக் கூறுகின்றார். திருமாலுக்கும் மேலாயவன் உருத்திர னென்றும், அவ் வுருத்திரனில் உயர்ந்தவன் மகேசன் என்றும், அவனிலும் சிறந்தவன் சதாசிவ மூர்த்தி என்றற்கு, “மாலால் மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்க சதாசிவனும்” என்றும் கூறுகிறார். வேத புருடன் முதல் சதாசிவன் ஈறாகவுள்ள இம் மூர்த்திகள் தத்தம் தகுதிக் கொப்ப மேலுள்ள மூர்த்திகளை வணங்கிப் போற்றுபவாதலால், “தகமதிக்குந் தோறும்” எனக் குறிக்கின்றார். செயப்பாட்டு வினை செய்வினை வாய்பாட்டில் வந்தது. இவர்களின் மேலாயுள்ள சிவ பரம் பொருளின் திருவடிகள் யாவருடைய சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருப்பவனவாதலால் “அவர் உளத்தின் மேலும் மறைந்துறையும் தாள் மலர்கள்” எனச் சிறப்பிக்கின்றார். பெருமை மிக்கவர் வரவால் வீடு பெருமை பெறும் என்னும் உலகியல் கருதி “அகம் மதிக்க நடந்து என் பால் அடைந்து” என வுரைக்கின்றார். பெறலரிய தொன்றை வலியத்தாமே போந்து ஒருவர் கொடுப் பாராயின் அவரது உள்ளத்தின் அருட்பண்பு உயர்ந்து விளங்குதலால், “அருட் பெருமை வியப்பே” எனப் புகல்கின்றார்.
இதனால், உயர்ந்த மூர்த்திகளின் உயர்வு காட்டித் திருவருட் பெருமையைச் சிறப்பித்தவாறாம். (76)
|