3136. இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என் கரத்ேத
குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே
உரை: குணக் குன்றாகிய பெருமானே, இருவினை யொப்புணர்வு பெற்று, மலவிருள் நீங்கும் செவ்வி யெய்துவது எப்பொழுதோ அப் பொழுதில் உண்மை ஞான வொளியாகிய உருவத்துடன் உள்ளத்தின் அகமும் புறமும் பிரணவா காரமாய்ப் பிறக்கும் ஞானப் பொருளை, உணர்த்துவனவாகிய திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்த, எளிய என் பொருட்டுத் தெருவில் நடந்து போந்து வாயிற் கதவைத் திறக்கச் செய்து, சிறியவனாகிய என்னைத் தமது முன்பழைத்து ஆசிரிய வுருவில் இருந்து என் கையில் ஒன்று கொடுத்தருளினாய்; இந்த நின் அருட் செயலால் யான் செய்த குற்ற மெல்லாம் குணமாகக் கொள்ளப் பட்டமை தெரிகிறது. எ.று.
சலியாப் பெருங் குணங்களின் திரட்சியாய்த் தோன்றுதலால், “குணக்குன்றே” என்று கூறுகிறார். இருவினை யொப்புணர்வாவது நல்க தன் நலத்தையும் தீயதன் தீமையையும் ஒப்பாக உணர்தல். “நன்றாங்கால் நல்லவாக் காண்பவன் அன்றாங்கால் அல்லற் படுவது எவன்” (குறள்) எனத் திருவள்ளுவர் கூறுவர். இரண்டையும் ஒப்ப நோக்கும் தன்மையால் மனத்தின்கண் திண்மையும் உணர்வின்கண் தெளிவும் உண்டாதலால் தடுமாற்றமும் மயக்கமும் இல்லாகிக் கெடுதலால் அப்பொழுது நிலவும் அறிவு இருள் நீங்கி இன்ப முறுவது கண்டு அதனை அறிஞர் மலபரிபாகம் எனக் கூறுகின்றனர். மல பரி பாகம் மலவிருள் நீங்கும் பக்குவம். இருவினை யுணர்வொப்பும் மலபரி பாகமும் தெளிந்த ஞான நிகழ்ச்சிக்கு இனிய வாய்ப்பளித்தலால் உள்ள முற்றும் ஞானவொளி கொண்டு பிரணவமான சிவஞான வடிவமுறும என்பாராய், “இருவினை யொப்பாகி மலபரிபாகம் பொருந்தல் எத்தருணம் அத் தருணத்து இயல் ஞான வொளியா முருவினை யுற்று உள்ளகத்தும் பிரணவமே வடிவாய்” என்று இயம்புகின்றார். உயிரின் உணர்வு இயங்கும் இடமாகிய உள்ளத்தின் அகம் புறம் இரண்டும் பிரணவாகாரமாம் என்பது கருத்து. முன்னைத் தவம் உடையார்க்கு இறைவன் குருவாய்த் தோன்றி ஞான மருளுவன் என்பது பற்றிக் “குரு வடிவம் காட்டி யொன்று கொடுத்தாய்” என்கிறார். ஞானப் பொருள் விரும்பும் கருத்துடையனாதலை முகக் குறிப்பாற் கண்டு குரு வடிவம் கொண்டார் எனினும் பொருந்தும்.
இதனால், இறைவன் குரு வடிவம் காட்டி அருள் புரிந்தமை தெரிவித்தவாறாம். (77)
|