3137. தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே
சார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே
எம்மடியார் என்றுகொளும் இணையடிகள் வருந்த
இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து
கம்மடியாக் கதவுபெருங் காப்பவிழப் புரிந்து
கடையேனே அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
நம்மடியான் என்றெனையுந் திருவுளத்தே அடைத்தாய்
நடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே.
உரை: அம்பலத்தின்கண் ஆடல் புரிகின்ற தலைவனே, தமக்கு அடியராயினார் வருத்த மெய்துவராயின், அதனைக் காணப் பொறாமல் அப்பொழுதே அவர்பால் அடைந்து, வருத்தங்களை அருள் கூர்ந்து போக்கி, இவர் எமக்கு அடியராவர் என்று ஏற்று, ஆதரவு செய்யும் இரண்டாகிய திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்த இராப் பொழுதின் கண், நடந்து எளியனாகிய யான் உறையும் வீட்டை யடைந்து, மனை வளம் குன்றாத பெரிய கதவைத் திறக்கச் செய்து, கடையனாகி என்னை முன்பழைத்து, என்னுடைய கையில் ஒன்றைக் கொடுத்து நமக்கு அடியவனென்று வாயாற் சொல்லி என்னையும் திருவுள்ளத்தில் கொண்டருளினாய், உனது நல்லருள் இருந்தவாறு என்னே. எ.று.
சகித்தல்-பொறுத்தல். வருத்தம் கண்டதும் அடியார் பக்கல் சென்றணைந்த விரைவு புலப்பட, “அக்கணத்தே சார்ந்து” என கூறுகின்றார். தயவு-அருள். இடம் என்றது இருக்கும் வீட்டை. கம் - மனையின்கண் இருந்து பெறலாகும் போகம். மடிதல்-குன்றுதல். பெருங்காப்பு - பெரியதாழ். காப்பவிழ்த்தலாவது தாழ் நீக்கித் திறத்தல். கடையேன்-கீழவன். மனத்திற் கொண்டருளினாய் என்ற உலகியல் வழக்கு திருவுளத்தடைத்தல் எனச் சமயச் சான்றோர் வழக்கில் நிலவும் என அறிக.
இதனால், நம்மடியான் என ஏன்றருளும் பெருங் கருணையே வியந்தவாறாம். (78)
|