3138.

     உம்பருக்குங் கிடைப்பரிதாம் மணிமன்றில் பூத
          உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே
     செம்பருக்கைக் கல்லுறுத்தத் தெருவில்நடந் திரவில்
          தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
     வபவருக்குப் பெறலரிதாம் ஒருபொருள் என் கரத்தே
          மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்
     இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்
          இறைவநின தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே.

உரை:

     இறைவனே, தேவருலகத்துத் தேவர்கட்கும் பெறுதற்கரிதாகிய மணியிழைத்த அம்பலத்தின் பூத வடிவங்கட் கெல்லாம் அப்பால் நின்று ஆடுகின்ற திருவடிகளின் சிவந்த பருக்கைக் கற்கள் உறுத்தி வருத்த, இரவில் தெருவில் நடந்து வாயிற் கதவைத் திறக்கச் செய்து உட்புகுந்து சிறியனாகிய என்னை அழைத்துப் புதியவர்கள் பெறமாட்டாத ஒருபொருளை என் கையில் அன்புடன் கொடுத்து “இனித் துன்பமின்றி வாழ்வாயாக” என்று சொல்லி யருளினாய்; இங்கு உள்ளவர்க்கும் அப்பாலுள்ளவர்க்கும் இது வியப்பாக வுளதாகலின், நினது திருவருளின் பெருமையை எவ்வாறு புகழ்ந்து உரைப்பேன். எ.று.

     உம்பர்-மேலாகிய தேவருலகத்தில் வாழ்கிற தேவர்கள். நில முதலிய ஐம்பூதங்கள் கலந்த இவ்வுலகிற்கு மேலதாதலால், உம்பர் எனப்படுகிறது. மணி மன்று, தேவருலகுகட்கு அப்பாலதாகலின், “உம்பருக்கும் கிடைப்பரிதாம் மணிமன்று” எனக் குறிக்கின்றார். பொறி புலன்கள் காணத் தோன்றும் பூத வுருவ வகைகட்கு அப்பால் அருவமாய் நின்றாடும் திருக்கூத்து என்றற்கு, “பூத வுருவம் கடந்தாடும் திருவடிகள்” எனப் புகல்கின்றார். உத்தர ஞான சிதம்பரமாகிய பார்வதிபுரம் செம்மண்ணும் பருக்கைக் கற்களும் நிறைந்த நிலமாதலின், “செம்பருக்கைக் கல்லுறுத்த” எனவும், அவை முட்களைப் போலக் காலடியிற் பொத்து வருத்தும் இயல்பினவாகலின், அவற்றை விதந்தும் உரைக்கின்றார். குணஞ் செயல்களாற் சிறுமையுடையன் என்றற்குச் சிறியேன் என்கின்றார். வம்பர் - புதியவர். பழ வடியார்க்கே திருவருள் உரியதென வெளிப்படுத்தற்கு, “வம்பருக்குப் பெறலரிதாம் ஒரு பொருள்” என இயம்புகிறார். மனமகிழ்ச்சியுடன் தரப்பெற்ற தாம் மலர்ந்த முகத்தினராகக் கண்டமையின், கொடுப்பவரும் “இனித் துன்பமின்றி வாழ்க” எனச் சொல்லியது பெயர்த்தும் தாம் கொண்டுரைப்பாராய், “துயர் தீர்ந்து வாழ்கவென வுரைத்தாய்” என்றும், கொடுத்ததை உடனிருந்து கண்டவரும் அவர்களால் பிறரும் அறிந்து வியந்து பேசிக் கொண்டமையின், “இம்பருக்கும் அம்பருக்கும் இது வியப்பாம்” என்றும், எனவே இந்நிகழ்ச்சியை விரிவாகப் புகழ்ந்து பேசுவது மிகை என்பாராய், “நின்னருட் பெருமை அணிந்திசைப்பது எவன்” என்றும் இசைக்கின்றார். அணிந்துரைத்தல்-அணி நலம் கலந்து பாரித்துரைத்தல்.

     இதனால், தில்லையம்பலத் திருநடனம் பூத வுருவம் கடந்தது எனப் புகன்றவாறாம்.

     (79)