3139.

     உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
          உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
     துருவமுட யாப்பரம துரியநடு விருந்த
          சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
     தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
          சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
     மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
          மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.

உரை:

     கூடுதற் கினியவனும், அம்பலத்தில் திருநடம் புரிபவனுமாகிய கருணையே நிறைந்த பெரியகடல் போன்ற பெருமானே, அருவம் நான்காகவும் உருவம் ஒரு நான்காகவும் அருவுருவம் ஒன்றாகவும் கூடிய ஒன்பது வகையும் கடந்து, மேலும் துருவிக் காண முடியாத மேனிற்கும் துரியத்தின் நடுவே எழுந்தருளுகிற உண்மையுருவாய் அனுபவ மயமாய் விளங்குகிற திருவடிகள் இரண்டும் மண்ணிற் பொருந்தி, சிறு சிறு செந்நிறப் பருக்கைக் கற்கள் கிடந்து வருத்த நடந்து சிறியனாகிய என்பாற் போந்து என்னுடைய அங்கையில் ஒன்றைத் தந்தருளினாய்; நின் பெருமையை என்னாற் புகழ்ந்துரைக்க இயலாவகை விரிந்தது காண். எ.று.

     “மருவினார்க் கெளியர் போலும்” (நாகேச்) என நாவுக்கரசர் கூறுதலையனுபவித்துக் காண்கின்றமையின், “மருவ வினியாய்” எனவும், மன்றில் நின்றாடும் பெருமானாதலால், “மன்றில் நடம் புரிவாய்” எனவும் உரைக்கின்றார். உருவம் நான்காவன:- பிரமன், திருமால் உருத்திரன் மகேசன் என்பன; அருவம் நான்காவன:- சிவம், சத்தி, நாதம் , விந்து எனபன; அருவுருவம் ஒன்றென்பது சதாசிவ மூர்த்தத்தை. அருவம் நான்காதல் பற்றி, “அவ்வளவாய்” என்று கூறுகிறார். இவ்வொன்பதற்குப் பரமாவதும் பரசிவம்; அது தானும் அகநாட்டமுடைய பெருமக்கட்குத் துரியத்தானத்தே காணப்படுவது பற்றி, “ஒன்பானும் கடந்து பரமதுரிய நடுவிருந்த சொருப” என்றும், அது உணர்வால் உணர்ந்து அனுபவிக்கப் படுவதன்றி வாயால் உரைக்க வொண்ணாதது என்பது விளங்க “அனுபவ மயமாம் துணையடிகள்” என்றும் சொல்லுகின்றார். இதனை, “அகத்திற் கண் கொண்டு காண்பதே ஆனந்தம், மகட்குத் தாய் தன் மணாளனோடாடிய சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே” (திருமந்) எனத் திருமூலர் உரைப்பது காண்க. தெரு - தெருவமென வந்தது. “உருவச் செங்கொடி தெருவத்துப் பரப்பி” (1 : 38 : 351) எனப் பெரும்கதை வழங்குதலறிக. பரற்கல் - சிறுகற்கள். செங்கை-சிவந்த உள்ளங்கை. “செங்கையிலிருப்பினும் சேயன் சேயனே” (பிறை) எனச் சிவப்பிரகாசர் கூறுவது காண்க. பெருமை மிகவும் பரந்த அளிவிற்றாதலால் சிறுமையுடையவனான எனக்கு இயலுவதன்று என்பாராய், “பெருமை வழுத்த முடியாது” என மொழிகின்றார்.

     இதனால், யோகக் காட்சியிற் றோன்றும் அனுபவ பரசிவம் உருவகை ஒன்பதும் கடந்த தென விளக்கியவாறாம்.

     (80)